தமிழ்நாடு

விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி

17th Sep 2019 02:40 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் ரூ. 112 கோடியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை திங்கள்கிழமை பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
காரைக்குடியில் புதை சாக்கடைத் திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதிலும் 40 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. புதை சாக்கடைத் திட்டத்தால் சீர்குலைந்த சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.  மழைநீர் சேகரிப்புத் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் இதில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும்.  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் கேட்ட தகவல்களை  தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. அதனால், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.
இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகமாக இருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக முதல்வரும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் ஆலோசித்து வருகின்றனர். இதில் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு இல்லாத வகையில் முடிவு எடுப்பார்கள் என்றார் அமைச்சர்.
ஆய்வின்போது, தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன், காரைக்குடி சட்டபேரவை உறுப்பினர் கே.ஆர். ராமசாமி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன், காரைக்குடி நகராட்சி ஆணையாளர் ஏ. சுந்தரம்பாள், சிவகங்கை முன்னாள் எம்.பி., பிஆர். செந்தில்நாதன், புதை சாக்கடைத் திட்டப் பொறியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT