தமிழ்நாடு

பொருளாதார நெருக்கடியை திசை திருப்பவே ஒரே நாடு-ஒரே மொழி கோஷம்

17th Sep 2019 03:53 AM

ADVERTISEMENT

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மக்களையும், அரசியல் கட்சிகளையும் திசை திருப்பவே ஒரே நாடு-ஒரே மொழி உள்ளிட்ட கோஷங்களை பாஜக எழுப்புவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு கூறினார்.
திருச்சிக்கு திங்கள்கிழமை வருகை தந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: ஒரே நாடு-ஒரே மொழி- ஒரே குடும்ப அட்டை என அடுத்தடுத்து மக்களிடையே அதிர்ச்சியான தகவலை பரப்பி பாஜக ஆட்சியின் மீதான கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டு சதி வேலையில் அக்கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஹிந்தி மொழிதான் நாட்டை இணைக்கும், ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது சாதாரண கருத்தல்ல. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ராஜாஜி காலம் தொடங்கி தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க நடந்த அனைத்து முயற்சிகளும் இதுவரை முறியடிக்கப்பட்டுள்ளன. இதேபோல, இப்போதைய பாஜக அரசின் முயற்சியும் முறியடிக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து 
செயல்பட வேண்டும்.
5,  8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த தேவையில்லை. குழந்தைகளால் எத்தனை தேர்வுகளை எதிர்கொள்ள முடியும். பள்ளிக் கல்வியில் பல பொதுத் தேர்வு, பள்ளிக் கல்வி முடிந்து தொழில்கல்விக்கு செல்ல நீட், நெக்ஸ்ட் என பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 
இது சாதாரண ஏழை, எளிய மக்கள் கல்வி பயிலுவதை தடை செய்யவும், உயர்ந்த நிலைக்கு வருவதை தடுக்கவும் திட்டமிட்டு இத்தகைய நடைமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT