கட்சித் தலைமையின் அறிவுரையை ஏற்று, அதிமுகவினர் எந்த இடத்திலும் பேனர், கட்அவுட்களை வைக்கவில்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ் மொழி, பேனர் விவகாரம் போன்றவற்றில் விளம்பரத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
இளம்பெண் சுபஸ்ரீ மறைவைத் தொடர்ந்து, முதல்வர், துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டனர். அதனை அதிமுகவினர் முழுமையாக கடைப்பிடித்தனர். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விட்ட பிறகும் திருவண்ணாமலையில் அந்தக் கட்சியினர் கட்அவுட், பேனர்கள் வைத்துள்ளனர்.
தமிழ் மொழி விஷயத்தில் விளம்பரத்துக்காக திமுக பேசலாமே தவிர, உண்மையிலேயே பாடுபடும் ஒரே கட்சி அதிமுகதான். தமிழ் என்றும் எதிலும் ஒலித்திட வேண்டும் என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. இந்த உறுதியை வரலாறு பேசும்.
தமிழகத்தைப் பொருத்தவரை இருமொழிக் கொள்கைதான்.
அந்தக் கொள்கையில் இருந்து மாறவே மாறாது. முன்னாள் முதல்வர்கள் அண்ணாவில் இருந்து தொடங்கி மறைந்த ஜெயலலிதா காலம் வரையில் இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றி வந்தோம். இது எப்போதும் தொடரும் என்றார் ஜெயக்குமார்.