குற்றாலம் ஐந்தருவியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை திங்கள்கிழமை நீக்கப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர். திங்கள்கிழமை அதிகாலை தண்ணீர்வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
திங்கள்கிழமை காலைமுதல் மேகமூட்டமும், அவ்வப்போது லேசான மழைச்சாரலுடன் குளிர்ச்சியான தட்பவெப்பம் நிலவியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால், திங்கள்கிழமை வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் நெரிசலின்றி உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.