வட மாநிலங்களில் தமிழ் கற்றுத்தர அமித் ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் க.பாண்டியராஜன்

வட மாநிலங்களில் தென்னிந்தியாவின் மூத்த மொழியான தமிழைக் கற்றுத்தர மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் வெளியிடப்பட்ட அண்ணா குறித்த மலருடன் (இடமிருந்து) முனைவர் பட்ட ஆய்வாளர் எ.கண்ணம்மாள்,  பேராசிரியர் பா.ராசா,  
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் வெளியிடப்பட்ட அண்ணா குறித்த மலருடன் (இடமிருந்து) முனைவர் பட்ட ஆய்வாளர் எ.கண்ணம்மாள்,  பேராசிரியர் பா.ராசா,  

வட மாநிலங்களில் தென்னிந்தியாவின் மூத்த மொழியான தமிழைக் கற்றுத்தர மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வலியுறுத்தினார்.
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாள் விழா ஆகிய விழாக்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. விழாவுக்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் முன்னிலை வகித்து தமிழ் வளர்ச்சிக்கு அண்ணா ஆற்றிய பணிகள் குறித்து விளக்கிப் பேசினார்.  
விழாவுக்கு  அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமை வகித்து அண்ணா குறித்த மலரை வெளியிட்டுப் பேசியது:  
தமிழகத்துக்கு ஜனநாயக அரசியலை கற்பித்த முன்னோடி  பேரறிஞர் அண்ணா.  ஒரு சாமானியனாலும் அரசியல் கட்சி தொடங்க முடியும்; ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று முன்னுதாரணத்தைத் தமிழகத்தின் மூலமாக இந்தியாவில் உருவாக்கியவர் அவர்.  
அறிவையும், அதிகாரத்தையும் ஏழை எளியோருக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுத் தந்தார்.  "பிரெஞ்சு கலைக்கழகத்தைப் போன்று தமிழுக்கு ஒரு உயராய்வு மையம் இருக்க வேண்டும்' என்பதற்காகவே மறைந்த முதல்வர் அண்ணாவின் முயற்சியால் உருவானது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். தமிழ் வளர்ச்சிக்கு இந்த நிறுவனத்தில் ஒட்டுமொத்த தமிழாராய்ச்சிகளுக்கான இணைதளம் தொடங்கப்படவுள்ளது என்றார்.
ஹிந்தி பேசுவோர் 44 சதவீதம் மட்டுமே:  இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
புதிதாக ஒரு மொழியைக் கற்று கொள்வது என்பது தவறில்லை. அதே வேளையில் அந்த மொழி மக்கள் மேல் திணிக்கப் படக்கூடாது. அமித் ஷா எந்த கண்ணோட்டத்தில் இந்த கருத்தைப் பேசியிருக்கிறார்  என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழியாக இல்லாமல், அந்த இடத்துக்கு ஹிந்தி மொழி வரவேண்டும் என்று கூறுவது போலத்தான் தெரிகிறது.  என்னை பொருத்தவரை 44 சதவீத மக்கள் இந்தியாவில் ஹிந்தி மொழி பேசுபவர்களாக உள்ளனர். 
இன்னும் கூட இந்தியாவில் பெரும்பான்மை எனும் நிலைக்கு ஹிந்தி வரவில்லை.  இத்தனை ஆண்டுகளாகியும் ஆங்கிலம் தான் நமது இணைப்பு மொழியாக உள்ளது. அதை மாற்றவேண்டும் என்று கொள்கை ரீதியாக பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.  ஆனால், ஹிந்தி மொழி தான் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என்ற சித்தாந்தத்தை தமிழக அரசு எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை.  
உலகளவில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கையை 10 கோடியிலிருந்து 20 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கமாகும். இதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 
பிறமொழிகளை வளர்த்தால்...: இந்தியாவில் உள்ள 22 முக்கிய மொழிகள் பட்டியலில், 10 மொழிகளாவது தலா 1 கோடி மக்களுக்கு மேல் பேசும் மொழிகள் ஆகும்.   தென்னிந்திய மொழிகளில் மூத்த மொழியான தமிழை வட மாநிலங்களில் கற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை அமித்ஷா முன்னெடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. 
ஹிந்தியை முதன்மையாகக் கொண்ட மாநிலங்களில் பிற இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும்போது அந்த மொழிகள் வளர்ச்சி பெறும். இது சாத்தியப்படும்போது  ஹிந்தியை  பிற மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்கிற பக்குவம் வரலாம் என்றார் அவர்.   விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ந.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com