மந்தகதியில் டெல்டா மாவட்ட ரயில்வே திட்டங்கள்

மந்தகதியில் டெல்டா மாவட்ட ரயில்வே திட்டங்கள்

காவிரி டெல்டா மாவட்ட ரயில் திட்டப் பணிகளுக்கு ரயில்வே துறை போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

திருத்துறைப்பூண்டி: காவிரி டெல்டா மாவட்ட ரயில் திட்டப் பணிகளுக்கு ரயில்வே துறை போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தமிழகத்தில் ரயில் போக்குவரத்தில் மக்கள் அதிகம் பயன்பெறாத பகுதியாக இதுவரை டெல்டா மாவட்டங்கள் விளங்கி வருகின்றன. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மட்டுமே பிரதானமாக ரயில் வசதியைப் பெற்றுள்ளன.ஒரு நூற்றாண்டுக்கும் மே லான பழைமையான காரைக்குடி - சென்னை வழித்தடம் 3 கட்டங்களாக அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. திருவாரூர் வரை 300 கி.மீ. தூரத்துக்கு திட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்து திருவாரூரில் இருந்து பணிகளைத் தொடங்காமல் அப்போதைய ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசில் ரயில்வே நிலைக் குழுவில் பதவி வகித்த ஒருவரின் தலையீடு காரணமாக காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக தலையை சுற்றிக் கொண்டுபணிகள் தொடங்கப்பட்டு நிறைவு பெற்றும் ரயில் சேவை தொடங்க முடியாத நிலை நீடிக்கிறது. 

தொடர்ந்து மக்கள் போராடியதன் விளைவாக சுமார் ரூ. 800 கோடியில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை உள்ள 72 ரயில்வே கேட்களில் போதிய கேட்கீப்பர்கள் நியமிக்கப்படாததால் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னைக்கு நேரடி ரயில் வசதி பெற முடியாத நிலையில் உள்ளனர்.

இதில் ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள 13 ரயில்வே கேட்களுக்கு மட்டும் தற்காலிக தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். 2 ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 59 ரயில்வே கேட்டுகளில் ரயில்வே பொறியியல் துறையினால் இன்னும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. 

தற்போது, திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்துக்கு 338 பேர் தென்னக ரயில்வே மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு அதில் 100 பேர் முதல் கட்டமாக பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். 228 பேர் அடுத்த சில தினங்களில் பணி ஆணை பெற்று பணிகளில் நியமிக்கப்பட உள்ளனர். இதில், திருவாரூர்- காரைக்குடி ரயில் நிலையங்களுக்கான 50 பேர் ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த வழித்தடம் சென்னையில் இருந்து ராமேஸ்வரம், காரைக்குடி மற்றும் தென் மாவட்டங்களுக்கும் கூடுதல் ரயில்களை இயக்க முடியும். இதனால் 10 ஆண்டுகளாக ரயில்வே சென்னைக்கு நேரடி ரயில் வசதி இல்லாத நிலை தவிர்க்கப்படும்.

அகஸ்தியம்பள்ளி: மிகவும் பழைமையான திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரயில் பாதையில் தரை சமன்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு தண்டவாளங்கள் பதிக்கும் பணி தொடங்கியுள்ளன. 2020-ஆம் ஆண்டு மார்ச்சில் இப்பணிகள் முடிக்கப்படலாம் என கருதப்படுகிறது. இந்த வழித்தடம் இப்பகுதியில் விளையும் உப்பு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பப்படும். இதன்மூலம் ரயில்வே துறைக்கு அதிகளவில் வருவாய் ஈட்டித்தரும் வழித்தடமாக விளங்க வாய்ப்பு உள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் வரை செல்லும் ரயில் திட்டங்களுக்கு 100 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் ரூ. 40 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் காலதாமதமாக இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தமிழகத்தில் 11 புதிய ரயில் பாதை திட்டப் பணிகளுக்கும் 20 சதவீதம் மட்டுமே நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி திட்டத்துக்கு 100 சதவீதம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கி இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும். பேரளம்- காரைக்கால் ரயில்வே திட்டப் பணிகளை நிறைவேற்றினால், கிழக்கு கடற்கரை ரயில் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதி நிறைவடையும். 

மன்னார்குடி- பட்டுக்கோட்டை: மன்னார்குடி - பட்டுக்கோட்டை புதிய வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி இதுவரை தொடங்கவில்லை. அதற்கென தனிவட்டாட்சியரையும் தமிழக அரசு நியமிக்கவில்லை. பாமணி ஆறு, அசுவினி ஆறுகளில் இரண்டு பெரிய பாலம் கட்ட வேண்டிய நிலையில் 34 கிலோ மீட்டர் கொண்ட இப்பகுதியில் மதுக்கூர், பரவாக்கோட்டை ஆகிய 2 இடங்களிலும் ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இத்திட்டம், செயல்படுத்தப்பட்டால் தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் சரக்கு ரயில் புறவழிச்சாலை வழியாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம் வழியாக செல்ல வாய்ப்பு உள்ளது. சரக்கு ரயில் இயக்க இந்த வழித்தடம் புதிய வழித்தடம் ஆக மாறும்.

பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்: இந்த புதிய வழித்தடம் ரயில்வே துறை மூலமாக 
அறிவிக்கப்பட்டும் இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. 

தஞ்சாவூர்-அரியலூர்: 1969-ஆம் ஆண்டிலிருந்தே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் மக்கள் பிரதிநிதிகள் இக்கோரிக்கையை முன்னெடுத்து செல்லாததால் திட்டம் தொடக்க நிலையிலேயே உள்ளது. அரியலூர் பகுதியிலிருந்து சிமென்ட் மற்றும் கனிமப் பொருள்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவும், பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை செல்பவர்கள் விரைந்து செல்லவும் இந்த வழித்தடம் மிகவும் உபயோகமாக இருக்கும் என கண்டறியப்பட்டும், இதுவரை பணிகள் தொடங்கவில்லை. 

குறிப்பாக சரக்கு ரயில் வேகன் ஒன்றில் இரண்டரை லாரிகளில் ஏற்றக்கூடிய மூட்டைகளை ஏற்ற முடியும் . ஒரு சரக்கு ரயிலில் 42 வேகன்கள் இணைக்கப்படும். இது இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். டெல்டா மாவட்ட ரயில்வே திட்டங்களை போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடித்து மக்களின் போக்குவரத்திலும் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்றும் இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். 

இதுகுறித்து, தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் துணைப் பொதுச் செயலர் டி. மனோகரன் கூறியது:  தமிழகத்தில் 11 புதிய ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 20 சதவீத நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலையில் அந்த புதிய திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ. 52 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போதுமானதல்ல. உடனடியாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படா விட்டால் பணிகளின் திட்ட மதிப்பீடு உயரும் அபாய நிலை உள்ளது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com