நாடாளுமன்றக் குழு எச்சரிக்கையையும் மீறி அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பி.க்கள்

அரசு பங்களாவை காலி செய்யுமாறு முன்னாள் எம்.பி.க்களை நாடாளுமன்றக் குழு கடுமையாக எச்சரித்துள்ளபோதிலும், 82 முன்னாள் எம்.பி.க்கள் இன்னும் அந்த பங்களாக்களை காலி செய்யவில்லை எனத் தெரியவந்துள்ளது. 
நாடாளுமன்றக் குழு எச்சரிக்கையையும் மீறி அரசு பங்களாவை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பி.க்கள்

அரசு பங்களாவை காலி செய்யுமாறு முன்னாள் எம்.பி.க்களை நாடாளுமன்றக் குழு கடுமையாக எச்சரித்துள்ளபோதிலும், 82 முன்னாள் எம்.பி.க்கள் இன்னும் அந்த பங்களாக்களை காலி செய்யவில்லை எனத் தெரியவந்துள்ளது. 
அந்த முன்னாள் எம்.பி.க்களை விரைவில் வெளியேற்ற, அரசு கட்டட (அங்கீகாரம் இன்றி குடியிருத்தல்) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முனைந்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 
தங்களது பதவிக் காலம் முடிந்த பிறகும் அரசு பங்களாக்களில் குடியிருந்த 200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் ஒரு வாரத்துக்குள்ளாக அவற்றிலிருந்து வெளியேற வேண்டும் என்று சி.ஆர். பாட்டீல் தலைமையிலான அரசு இல்லங்கள் ஒதுக்கீட்டுக்கான நாடாளுமன்றக் குழு கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி உத்தரவிட்டது. 
மேலும், அந்த பங்களாக்களுக்கான மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு இணைப்புகளை 3 நாள்களுக்குள் துண்டிக்குமாறும் உத்தரவிட்டது. அந்த உத்தரவையும் மீறிய வகையில் இன்னும் 82 முன்னாள் எம்.பி.க்கள் அரசு பங்களாக்களில் குடியிருந்து வருவதாக அரசு இல்லங்கள் ஒதுக்கீட்டுக்கான நாடாளுமன்றக் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: 
அரசு பங்களாக்களை காலி செய்யுமாறு இல்லங்கள் ஒதுக்கீட்டுக்கான குழு உத்தவிட்ட பிறகு, பெரும்பாலான முன்னாள் எம்.பி.க்கள் தாங்கள் குடியிருந்த பங்களாக்களை காலி செய்துவிட்டனர். கடைசி நிலவரத்தின் படி, இன்னும் 82 முன்னாள் எம்.பி.க்கள் அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டியுள்ளது. 
நாடாளுமன்றக் குழு உத்தரவையும் மீறி அவர்கள் அவ்வாறு குடியிருப்பது ஏற்றுக் கொள்ள இயலாதது. அந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பங்களாக்களில் இருந்து வெளியேறுமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. 
பங்களாக்களை காலி செய்யாத பட்சத்தில், அரசு கட்டட (அங்கீகாரம் இல்லாமல் குடியிருத்தல்) சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை வெளியேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட பங்களாவிற்கான மின்சாரம், குடிநீர், சமையல் எரிவாயு இணைப்பு துண்டிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com