தமிழகத்தில் தீ விபத்துகளின் எண்ணிக்கை 7.41% அதிகரிப்பு

தமிழகத்தில் தீ விபத்துகளின் எண்ணிக்கை 7.41 சதவீதம் உயர்ந்துள்ளது. தினமும் சுமார் 61 தீ விபத்துகள் ஏற்படுவதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தீ விபத்துகளின் எண்ணிக்கை 7.41% அதிகரிப்பு


சென்னை: தமிழகத்தில் தீ விபத்துகளின் எண்ணிக்கை 7.41 சதவீதம் உயர்ந்துள்ளது. தினமும் சுமார் 61 தீ விபத்துகள் ஏற்படுவதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் ஏற்படும் இயற்கை பேரிடர்கள், தீ விபத்துகள், சாலை விபத்துகள் போன்றவற்றால் தமிழகம் பெரும் சேதத்தையும், பின்னடைவையும் சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு 22,601 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துக்களில் 69 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 292.84 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. கடந்த 2017-ஆம் ஆண்டு 21,041 தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் 2017ஆம் ஆண்டை விட 2018ஆம் ஆண்டு 7.41 தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் தினமும் சராசரியாக 61 தீ விபத்துகள் ஏற்படுவதாக தீயணைப்புத்துறை தெரிவிக்கிறது.

பாம்புக்கு 10 ஆயிரம் அழைப்புகள்

மேலும், பேரிடர் மீட்பு உள்ளிட்ட மீட்பு பணிகள் தொடர்பாக தீயணைப்புத் துறைக்கு கடந்த ஆண்டு 25,525 அழைப்புகள் வந்துள்ளன. இதில் சுமார் 10 ஆயிரம் அழைப்புகள் பாம்பு பிடிப்பதற்காக வந்துள்ளன. இதைத் தவிர்த்து கடல், ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் சிக்கியவர்களை மீட்பதற்கு ஏராளமான அழைப்புகள் வந்துள்ளன. தண்ணீரில் மூழ்கி இறப்போர் எண்ணிக்கையில், தமிழகம் 5 அல்லது 6-ஆவது இடத்திலேயே தொடர்ந்து நீடிக்கிறது.

பராமரிப்பு இல்லாத குளங்கள், குட்டைகள், ஏரிகள் ஆகியவற்றில் மூழ்கி இறப்போரின் எண்ணிக்கையே அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நகரங்களில் மட்டுமே நவீனம்

அதிகரித்து வரும் தீ விபத்துகளைக் கருத்தில் கொண்டு தீயணைப்புத் துறை நவீனப்படுத்தப்பட்டு, நவீன கருவிகள் வாங்கப்படுகின்றன. ஆனால், இது போதுமானதாக இல்லை.

தமிழகத்தில் 331 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றில் 6,998 தீயணைப்பு படை வீரர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது தீயணைப்புத் துறையில் நவீன கருவிகள், புதிய வாகனங்கள் ஆகியவை சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கே வழங்கப்படுகின்றன. பிற பகுதிகளுக்கு நவீன கருவிகள் வழங்கப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது.

இதன் விளைவாக தீ விபத்துகளின்போதும், பேரிடர் மீட்பு பணியின்போதும் தீயணைப்புத்துறையினர் முழு திறனுடன் எதிர்கொள்ள முடிவதில்லை எனத் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பல வேளைகளில் தீ விபத்துகளினால் ஏற்படும் சேதங்களை தடுக்க முடியாத நிலையும் ஏற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இலக்கை அடையாத தீயணைப்புத் துறை

தீ விபத்துக்குரிய அழைப்பு வந்ததும் சென்னையில் சம்பவ இடத்தை 6 நிமிஷங்களிலும், பிற பகுதிகளில் 10 நிமிஷங்களிலும் சென்றுவிட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு சென்னையில் பெரும்பாலும் சாத்தியமாகும் நிலையில், மாநிலத்தில் பிற பகுதிகளில் இந்த இலக்கை எட்ட முடிவதில்லை.ஏனெனில் புதிதாக ஒரு தீயணைப்பு நிலைம்அமைக்க 25 கி.மீ. தூரத்துக்கு வேறு தீயணைப்பு நிலையம் இருக்கக் கூடாது, குறைந்தது 50 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட பகுதியாக இருக்க வேண்டும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தீ விபத்துகளினால் பொருள்சேதம் ஏற்படும் பகுதியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

ஆனால் இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் 10 கி.மீ., 15 கி. மீ., 20 கி.மீ. என்ற இடைவெளியில் தீயணைப்பு நிலையங்கள் இருக்கின்றன.

இதன் விளைவாக தமிழகத்தின் மற்றொரு பகுதியில் 50 கி.மீ. ஒரு தீயணைப்பு நிலையம் கூட இருப்பதில்லை. இதனால் அப் பகுதியில் தீ விபத்து ஏற்படும்போது, மிகவும் தாமதமாகவே சம்பவ இடத்தை அடைய முடிகிறது.

மீளாய்வு செய்ய வேண்டும்

இது தொடர்பாக, தீயணைப்புத் துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியது:
விதிமுறைகள் மீறப்பட்டு, விபத்துகள் குறைவாக ஏற்படும் பகுதிகளிலும், நிலையங்கள் திறப்பதற்குரிய சூழ்நிலைகள் இல்லாத பகுதிகளிலும் தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்படுகின்றன.இதன் விளைவாக, மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களுக்கு அவசர உதவி கேட்டு, ஆண்டுக்கு 10 அழைப்புகள் கூட வருவதில்லை.

அதேவேளையில், தேவையான இடங்களில் தீயணைப்பு நிலையம் இல்லாமல் இருப்பதால், பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்படும் பகுதிக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் தீயணைப்புத்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே, தற்போது தீயணைப்பு நிலையங்கள் இருக்கும் பகுதிகளை மீளாய்வு செய்து, தகுதி இல்லாத இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களை இடமாற்றம் செய்ய வேண்டும். அதேபோல, சென்னை உள்ளிட்ட நகரப் பகுதிகளை தவிர்த்து, பிற பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கும்  நவீன கருவிகளை வழங்க வேண்டும்.

அப்போதுதான் தீயணைப்புபடை வீரர்கள் ஆபத்துக் காலத்தில் துணிவுடன் செயல்பட்டு, மக்களை பாதுகாக்க முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com