ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை:  தமிழக முதல்வர் கே. பழனிசாமி உறுதி

தமிழக ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'காவிரி கூக்குரல்' நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'காவிரி கூக்குரல்' நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி

தமிழக ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 

தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் "காவிரி கூக்குரல்' இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர்  ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். 

இந்த இயக்கத்தின் மூலம் தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் காவிரி நதிப் படுகையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த இயக்கத்தில் இரு மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலைக்காவிரியில் இருந்து கடந்த 3-ஆம் தேதி சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது மோட்டார் சைக்கிள் பேரணியைத் தொடங்கினார்.  கர்நாடகத்தில் இருந்து ஒசூர் வழியாக தமிழகம் வந்தடைந்த இந்தப் பேரணி, தருமபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்னையை வந்தடைந்தது. 

இதைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:  ஈஷா அறக்கட்டளையின்  242 கோடி மரம் நடும் திட்டம் வரவேற்கத்தக்கது.  அந்த அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு  தமிழக அரசு துணை நிற்கும்.  தமிழகத்தில் மழை நீர் சேமிப்பு திட்டம் போன்று மரம் வளர்க்கும் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும். 

காவிரி ஆற்றின் பல்லுயிர் காத்தல்,  காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் மாசுகளை அகற்றுதல்,  காவிரி நகர்ப்புற கழிவுநீரை சுத்திகரிக்கத் தேவையான சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுதல், ஆற்றுப் படுகையில் மரங்களை நட்டு வளர்த்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள "நடந்தாய் வாழி காவிரி' என்ற திட்டத்தை செயல்படுத்த பிரதமரிடம்  நான் கோரிக்கை வைத்தேன். அதன் தொடர்ச்சியாக " நடந்தாய் வாழி காவிரி'  திட்டத்தைப் பாராட்டி இதே போன்று நாட்டிலுள்ள ஜீவநதிகளில் செயல்படுத்த குடியரசுத் தலைவர் நாடாளுமன்றக் கூட்டத்தில் தனது உரையில் இந்தத் திட்டத்தை குறிப்பிட்டுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ரூ.24.58 கோடியில் திட்டம்: இதேபோன்று தமிழகத்திலுள்ள பவானி, வைகை, அமராவதி, தாமிரவருணி ஆறுகளும் மாசுபடுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.  தற்போது வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.24.58 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று பாலாறுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் 2019-2020-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்:  தமிழகத்துக்கும், காவிரிக்கும் இடையேயான பந்தம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும் என இலக்கியத் தரவுகள் பறைசான்றுகின்றன. பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று புதினங்களில் காவிரியும் ஒரு கதாபாத்திரமாகப் படைக்கப்பட்டிருப்பதே அதற்குச் சான்றாகும்.  அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க  காவிரி நதி சர்ச்சைகளையும் உள்ளடக்கியது. அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீர்ப்பாயமும், உச்சநீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவுகள் மூன்று மாநிலங்களுக்கும் காவிரி நீர் செல்வதை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு மனிதனின் தேவையையும் நிறைவேற்ற இயற்கையிடம் போதிய வளங்கள் உள்ளன. 

ஆனால் மனிதனின் பேராசையைப் பூர்த்தி செய்ய இயற்கையால் ஒருபோதும் முடியாது என்கிறார் மகாத்மா காந்தி. அதை உணர்ந்து நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்து மரங்களை வளர்க்க வேண்டும்.  நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து தோள் கொடுக்க வேண்டியது அவசியம் என்றார்.  

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:  "காவிரி கூக்குரல்' என்ற ஒரு இயக்கத்தை ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியது பெருமையளிக்கிறது. தலைக்காவிரியில் பயணத்தைத் தொடங்கி தற்போது சென்னை வந்திருக்கிறார். வருகிற வழியெல்லாம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். 

இதுவரை 69 ஆயிரம் விவசாயிகள் வேளாண் காடுகள் குறித்து பயிற்சி பெற்றுள்ளனர்.  தமிழக மக்கள் அனைவரும் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் பெருவாரியாக மரம் வளர்ப்புப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்று தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார். 

இந்த நிகழ்ச்சியில்  தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நடிகை சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

242 கோடி மரங்கள் நட 12 ஆண்டுகள்: ஜக்கி வாசுதேவ்


காவிரிப் படுகையில் 242 கோடி மரங்கள் நடுவது என்பது ஒரே இரவில் நடந்து விடாது. அதற்காக 12 ஆண்டுகள் பாடுபட வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவிரி கூக்குரல் நிகழ்ச்சியில் அவர் பேசியது:  காவிரியை மீட்பது என்பது ஒரு நதியை மீட்பது அல்ல. 85 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காவிரிப் படுகை முழுவதையும் மீட்க வேண்டும். கர்நாடக முதல்வரும்,  புதுச்சேரி முதல்வரும் மர விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அதேபோன்று தமிழக அரசும் மர விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

காவிரி நதிப் படுகையில் 242 கோடி மரங்களை நட்டு வளர்த்தால் 9 முதல் 12 டிரில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். உலகில் உள்ள எல்லா ஆறுகளிலும் உள்ள நீரை காட்டிலும் 8 மடங்கு நீரை மண்ணில் பிடித்து வைத்துக் கொள்ள முடியும்.  நாட்டில் உள்ள 80 சதவீத நிலங்கள் விவசாயிகளிடம்தான் உள்ளது. விவசாயிகள் மரம் வளர்த்தால்தான் தேசத்துக்குப் பயன் விளையும்.   தற்போது தமிழகத்தில் 35 ஈஷா நாற்றுப் பண்ணைகள் உள்ளன. இதை அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 350 நாற்றுப் பண்ணைகளாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். 242 கோடி மரங்கள் நடுவது ஒருநாள் இரவில் நடந்து விடாது. இதற்காக 12 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டியுள்ளது.  இதனால் அனைவரும் 12 ஆண்டுகள் என்னுடன் இருக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com