தேசிய தரவரிசை அடிப்படையில் நிதியுதவி: மத்திய அரசு திட்டம்

உயர் கல்வி நிறுவனங்களுக்கு இனி தேசிய அளவிலான தரவரிசை (என்.ஐ.ஆர்.எப்) அடிப்படையில் நிதியுதவி அளிப்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசித்து வருவதாக


உயர் கல்வி நிறுவனங்களுக்கு இனி தேசிய அளவிலான தரவரிசை (என்.ஐ.ஆர்.எப்) அடிப்படையில் நிதியுதவி அளிப்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இது, தரவரிசை நடைமுறையில் அதிக உயர் கல்வி நிறுவனங்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் என்பதோடு, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்கின்றனர் பேராசிரியர்கள். 
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் நோக்கத்தோடு, கியூ.எஸ். மற்றும் டைம்ஸ் போன்ற சர்வதேச உயர்கல்வி தரவரிசைப் பட்டியலைப் போல தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்து, கடந்த 2016- ஆம் ஆண்டு முதல் இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, உலக தரத்திலான கல்வி நிறுவனங்களாக தரம் உயர்த்துவதே இந்த தேசிய நடைமுறையின் முக்கிய நோக்கம்.ஆனால், இந்த தரவரிசை நடைமுறையில் நாட்டிலுள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பங்கேற்பதில்லை. சில மாநில அரசு உயர் கல்வி நிறுவனங்கள் கூட பங்கேற்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணத்தால், இந்த தரவரிசை நோக்கமே பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
இந்த நிலையை மாற்ற, இனி மத்திய அரசின் அனைத்து வகையான நிதியுதவிகள் இந்த தேசிய தரவரிசை அடிப்படையிலேயே உயர் கல்வி நிறுவனங்களுக்கு வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிகாரி ஒருவர் கூறியது:
நாட்டில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் இந்த தரவரிசை நடைமுறையில் கொண்டு வரும் வகையில், அதை இந்த வகையில் கட்டாயமாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. என்.ஐ.ஆர்.எப். தரவரிசை அடிப்படையில் நிதி ஒதுக்குவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இது அதிக உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசை நடைமுறையில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் என்பதோடு, நாட்டில்ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com