தமிழ்நாடு

தமிழகத்தில் காசநோய் முழுவதுமாக ஒழிக்கப்படும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

13th Sep 2019 02:54 AM

ADVERTISEMENT


காசநோயே இல்லாத தமிழகம் என்ற நிலை விரைவில் எட்டப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
காசநோய்க்கான சிகிச்சை கால அளவைக் குறைக்கும் புதிய கூட்டு மருந்து சிகிச்சை முறை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.  புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
காசநோயை ஒழிப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, காசநோய்க்கு 24-இலிருந்து 28 மாதங்கள் வரை சிகிச்சை பெற வேண்டிய நிலையை மாற்றி 18-இலிருந்து 20 மாதங்களுக்குள் அந்நோயை குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள்  தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை வழங்கும் திட்டம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக இதுவரை 1.7 லட்சம் பேருக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் 35 மாவட்ட காசநோய் மையங்கள், 461 காசநோய் சிகிச்சை நிலையங்கள், 1,984 நுண் ஆய்வு மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு காசநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
2030-க்குள் காசநோய் இல்லாத தேசத்தை கட்டமைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடி கனவுகளில் ஒன்று. அந்த இலக்கை 2025-க்குள்ளாகவே தமிழகம் எட்டிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனை சாத்தியமாக்குவதற்காக தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து அந்த நோயின் தாக்கம் குறித்த கணக்கெடுப்பு ரூ. 9.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், காசநோயைக் கண்டறியும் நவீன பரிசோதனை வசதிகள் ரூ. 17.5 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT