வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: ஒரு மாத குழந்தைக்கு மறுவாழ்வு

DIN | Published: 12th September 2019 02:58 AM
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிர்பிழைத்த பச்சிளம் குழந்தைக்கு  சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, நரேஷ், பேராசிரியர் முகமது ரேலா, கே.இளங்குமரன்


சென்னை குரோம்பேட்டை ரேலா இன்ஸ்டியூட் மருத்துவமனை மருத்துவர்கள் இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்து உள்ளனர்.
மும்பையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இளம்பெண் கஷ்பியின் பச்சிளம் குழந்தை ஆர்யா. பிறந்த சில நாட்களில் வாந்தி எடுக்கத் தொடங்கிய ஆர்யாவின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமடையத் தொடங்கியதும் மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். 
ஆரம்பத்தில் தொற்றுநோய் என்று கருதி சிகிச்சை அளித்த மருத்துவர்களின் தீவிர பரிசோதனைக்குப்பின் ஆர்யா வளர்சிதை மாற்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் கண்டறிந்தனர்.
பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஆர்யாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தயங்கிய மருத்துவர்கள், அனுபவமிக்க அறுவை சிகிச்சை மருத்துவரான முகமது ரேலாவை அணுகுமாறு யோசனை தெரிவித்தனர்.
உடனடியாக குழந்தை ஆர்யாவை விமானம் மூலம் சென்னை கொண்டு வந்து குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர்.பேராசிரியர் டாக்டர் முகமது ரேலா தலைமையில் மருத்துவர்கள் இளங்குமரன், ஈரல்நோய் சிகிச்சை மருத்துவர் நரேஷ் ஆகியோர் மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டனர்.
 உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில், கஷ்பியின் இளைய சகோதரர் அசிக் குழந்தை ஆர்யாவுக்கு கல்லீரல் உறுப்புதானம் செய்தார். 10 மணி நேரம்  மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு மூலம் குழந்தை ஆர்யாவை உயிர்பிழைக்க வைத்தனர் மருத்துவர்கள்.
இது குறித்து பேராசிரியர் முகமது ரேலா கூறியது:
இந்தியாவில் முதன்முதலாக ஒரு மாத பச்சிளம் குழந்தைக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குழந்தையின் பெற்றோரை மட்டுமல்லாமல் அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
தற்போது பிறக்கும் 30,000 குழந்தைகளில் ஒரு குழந்தை வளர்சிதை மாற்றப் பிரச்னை காரணமாக பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான பச்சிளம் குழந்தைகள் என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியும் முன்பே உயிரிழக்கும் நிலையில், குழந்தை ஆர்யாவுக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பு குறித்து துல்லியமாகக் கண்டறியப்பட்டு, உரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

உழைத்தவனை மேடையேற்றி அழகு பார்க்கும் முதலாளி ரசிகன்தான்: நடிகா் விஜய் உருக்கமான பேச்சு
ஐந்து ஆண்டுகளுக்குள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முதலிடம்: இஸ்ரோ விஞ்ஞானி பேச்சு
பால் விற்பனையாளா்களிடம் அதிரடி ஆய்வு: 25 ஊற்றல் அளவீடுகள் பறிமுதல்
வாய்ப்பு... வாய்ப்பு... வாய்ப்பு... ஆவின் பொருட்கள் விற்பனைக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
கோவை சூலூா் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கல்லூரி இளைஞா் கைது