வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

என்ன மந்திரம் வைத்திருக்கிறார் மோடி? காங்கிரஸ் கேள்வி   

DIN | Published: 11th September 2019 05:32 PM
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

 

சென்னை: இந்திய பொருளாதாரத்தை 12 சதவீதமாக ஆக்குவதற்கு நரேந்திர மோடி என்ன மந்திரம் வைத்திருக்கிறார்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி புதனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நூறு நாள் சாதனைகளை விளக்கிக் கூறுவதற்காகவே  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வருகை புரிந்து பத்திரிகையாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார். இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமான பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருப்பதை எவருமே மறுக்க முடியாது. கடந்த ஜூலை 2018 இல் 8 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜூலை 2019 இல் 5 சதவீதமாக கடுமையாக சரிந்துள்ளது. இதுகுறித்து கருத்து கூறிய நிர்மலா சீதாராமன் இத்தகைய ஏற்றம் - இறக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்று பொறுப்பில்லாமல் ஒரு நிதியமைச்சர் கூறுவது மிகுந்த வேதனையைத் தருகிறது.

உலக வங்கியின் மதிப்பீட்டின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் பெருகியிருக்கிறது. இதற்கு காரணம் பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகள் தான்.

இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் ரூபாயாக உயர்த்தப் போவதாக நரேந்திர மோடி நம்பிக்கையோடு மதிப்பீடு செய்திருந்தார். ஆனால், இந்த நிலையை இந்தியா எட்டுவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தது 12 சதவீதமாக இருக்க வேண்டும். 5 சதவீதத்திற்கும் கீழே சென்று கொண்டிருக்கிற இந்திய பொருளாதாரத்தை 12 சதவீதமாக ஆக்குவதற்கு நரேந்திர மோடி என்ன மந்திரம் வைத்திருக்கிறார் ?

நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக நுகர்வு தேவைப்படுவதாக குறிப்பிட்ட நிதியமைச்சர், அரசு செலவுகளை அதிகரிப்பதன் மூலமே இது சாத்தியமாகும் என்கிறார். ஆனால், தனிநபர் நுகர்வு 18 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை. ஆனால், மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவு 14 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது மக்களிடையே கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வாகன உற்பத்தி குறைந்ததற்கு காரணம் பணம் வைத்திருப்பவர்கள் புதிதாக கார் வாங்க விரும்பாமல் மெட்ரோ ரயில் மற்றும் ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவன வாடகை கார்களை அதிகமாக பயன்படுத்துவதே இந்த சரிவுக்கு காரணம் என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இதைவிட ஒரு அப்பட்டமான திசைத் திருப்புகிற முயற்சி வேறு எதுவும் இருக்க முடியாது. பொருளாதார மந்தநிலை காரணமாக மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்ததனால் தான் வாகன விற்பனை குறைந்தது என்பதை பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

எனவே, இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் அதள பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட வேண்டும். புண்ணுக்கு புனுகு தடவுகிற ஜால வித்தையை கைவிட்டு அறுவை சிகிச்சை செய்து பொருளாதாரத்தை சீர்படுத்த முயல வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : alagiri slams modi government economic failures nirmala seetharaman state congress president KS azhagiri இந்தியப் பொருளாதாரம் பிரதமர் மோடி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி விமர்சனம்

More from the section

கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்: ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவு
ரயில்வே தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்
திருவள்ளூரில் அதிகபட்சமாக 22 செ.மீ. மழை பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம்
மின் சிகரெட் தடை! சாதா சிகரெட்டுக்கு மாற்று அல்ல; இது அதனினும் கொடிது! ஏன் தெரியுமா?
சென்னையில் இந்த ஆண்டின் முதல் கன மழை நாள் இன்று: எப்படி இருக்கிறது நகரம்?