தமிழ்நாடு

துபையில் ரூ.3,750 கோடிக்கு 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

10th Sep 2019 02:30 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ரூ.3,750 கோடிக்கு ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் செய்யப்பட்டன.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 28-ஆம் தேதியன்று வெளிநாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்றார். முதலாவதாக லண்டன் சென்ற அவர், அங்குள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்குச் சென்ற அவர், அங்குள்ள பல்வேறு நகரங்களுக்குச் சென்றார். பால்பண்ணை பூங்கா, மரபுசாரா எரிசக்தி மின்சாரத்தை சேமித்து வைக்கும் அமைப்பு என பல்வேறு புதிய அம்சங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
துபையில் பயணம்: பிரிட்டன், அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்த முதல்வர் பழனிசாமி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று துபை நாட்டுக்குச் சென்றார். அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
திங்கள்கிழமையன்று ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் வணிகத் தலைவர் கூட்டமைப்பு என்ற அமைப்பும், இந்திய துணைத் தூதரகமும் இணைந்து துபை தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தின. 
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:   முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ரூ.3,750 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்கிட ஆறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் 10 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
இதனிடையே, துபை பயணத்தை செவ்வாய்க்கிழமையன்று நிறைவு செய்யும் முதல்வர் பழனிசாமி, நள்ளிரவில் சென்னை திரும்பவுள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT