தமிழ்நாடு

தமிழர்களுக்கான அடையாளமே இல்லாமல் போய்விட்டது: துரைமுருகன் ஆதங்கம்

10th Sep 2019 02:45 AM

ADVERTISEMENT

சென்னை, செப்.9: குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைக்காமல் போவதால் தமிழர்களுக்கான அடையாளமே இல்லாமல் போய்விட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஆதங்கம் தெரிவித்தார்.
பேராசிரியர் மு.பி..பாலசுப்பிரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா, தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். 
இதில், துரைமுருகன் பங்கேற்று நூலை வெளியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பெற்றுக்கொண்டார்.  விழாவில் துரைமுருகன் பேசியது:
திமுகவினர் வீட்டிலேயே குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்காத நிலை உள்ளது. இதன் மூலம் தமிழர்களுக்கான அடையாளமே இல்லாமல் போய்விட்டது. ஆங்கிலம் பேசுவது தவறில்லை. எந்த மொழியிலும் பேசலாம். இப்போது ஹோட்டல்களில் எல்லாம் வட இந்தியர்கள்தான் வேலை செய்கின்றனர். அவர்களிடம் ஹிந்தியில் பேசினால்தான் புரிகிறது. அதனால், பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை. 
அதேசமயம், தமிழ் உணர்வை விட்டுவிடக்கூடாது. தமிழ் உணர்வையும் சுயமரியாதை உணர்வையும் ஊட்ட வேண்டிய நிலை உள்ளது. ஆங்கிலேயர்கள்தான் ஜனநாயக உணர்வை நமக்கு ஊட்டினர். ஆனால், நம்முடைய எதிரிகள் வேறுவிதமான உணர்வை நமக்கு ஊட்டுகிறார்கள். இந்த நாட்டை, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாசாரமாக மாற்ற முற்படுகிறார்கள். அதை எதிர்க்கும் உணர்வை அனைவரும் பெற வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT