வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

தங்கம் விலை உயர்வு எதிரொலி : தீபாவளிக்கு  புதிய நகைகள் வாங்க வியாபாரிகள் தயக்கம்

DIN | Published: 10th September 2019 02:29 AM


தங்கம் விலை உயர்வு எதிரொலியால், தீபாவளிக்கு புதிய நகைகள் வாங்க வியாபாரிகள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார மந்தம், உற்பத்தி குறியீடு மற்றும் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து தற்போது பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. விரைவில் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்வு காரணமாக விற்பனை 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. 
இந்நிலையில்,  தீபாவளி பண்டிகைக்கு புதிய நகைகள் வாங்க வியாபாரிகள் மத்தியில் தற்போது தயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒரு மாதத்துக்கு முன்பே புதிய வடிவமைப்பு நகைகள் மற்றும் கூடுதலாக நகைகளை வாங்க, நகை உற்பத்தியாளர்களிடம் வியாபாரிகள் முன்பதிவு செய்வர்.
ஆனால், நிகழாண்டில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால், கடந்த ஒரு மாதமாக நகை விற்பனை மந்தமாக உள்ளது. இதேபோல, ஏற்கெனவே, உற்பத்தியான நகைகளும் விற்பனையாகாமல் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய நகைகள் வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். 
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமாரிடம் கேட்டபோது, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை வருவதற்கு ஒரு மாதம் முன்பே புதிய நகைகளும்,  பாரம்பரிய நகைகளுக்கும், நகை உற்பத்தி, வடிவமைப்பாளர்களிடம் ஆர்டர்களைக் கொடுத்து விடுவோம். ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட புதிய நகைகள் சந்தைக்கு விற்பனைக்கு வரும். குறிப்பாக, சோலாப்பூர் 
நெக்லஸ், கேரள ஆரம், சங்கிலி, கம்மல், மோதிரம் ஆகியவற்றை நூற்றுக்கணக்காண டிசைன்களில் தயாரித்து வைத்திருப்போம். ஆனால், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து விட்டது.
 தற்போது 22 கேரட் கொண்ட ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் நகை வாங்குவதும், கணிசமாக குறைந்துள்ளது.  விற்பனையும் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.  
புதியதாக ஆர்டர் கள் கொடுப்பதில் நகை வியாபாரிகளுக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய அரசு எடுத்து வரும் பொருளாதார நடவடிக்கையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு,  மீண்டும் தங்கம் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர். 
இது குறித்து சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சல்லானியிடம் கேட்டபோது, தீபாவளி பண்டிகைக்கு ஒன்றரை மாதம் உள்ளது. புதிய நகைகள் வாங்குவது தொடர்பாக இப்போதே ஒரு முடிவுக்கு வரமுடியாது. அடுத்த மாதம்தான் சொல்ல முடியும்  என்றார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழர்களுக்கே முன்னுரிமை: உரியச் சட்டத்திருத்தம் கொண்டுவர ஸ்டாலின் வலியுறுத்தல்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு 
கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள்: அறிவிப்பு வெளியீடு 
அக்டோபர் 6-ஆம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு: பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு     
பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை பணிகள் முழுக்க உள்ளூர் மக்களுக்கே!: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்