தமிழ்நாடு

இலவச அரிசி வழங்கியதில் ஊழல்: புதுவை ஆளுநரிடம் நியமன எம்எல்ஏக்கள் புகார்

10th Sep 2019 02:27 AM

ADVERTISEMENT


புதுவையில் இலவச அரிசி வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக பாஜக நியமன எம்எல்ஏக்கள், துணைநிலை ஆளுநர் கிரண் பேடியிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
இலவச அரிசியை தொடர்ந்து வழங்க புதுவை பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையை முதல்வர் வே.நாராயணசாமி தலைமையிலான அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த 7-ஆம் தேதி ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்து அளித்தனர். இதை ஆளுநர் ஏற்கவில்லை. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் வே.நாராயணசாமி, இலவச அரிசித் திட்டத்தை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டதாகவும், இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார். 
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல்வரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்த ஆளுநர் கிரண் பேடி, அரிசி வழங்குவதில் ஊழல் புகார் வந்ததால், அதற்கான பணத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்துமாறு கூறினேன் என்றும், இதைப் பயன்படுத்தி 
மக்களே கடைகளில் அரிசியை வாங்கிக் கொள்வார்கள் என்றும், அரிசி வழங்க தான் ஒருபோதும் தடையாக இல்லை என்றும் தனது கட்செவி அஞ்சலில் கருத்து தெரிவித்தார்.இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பாஜக நியமன எம்எல்ஏக்கள் வி.சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் கிரண் பேடியைச் சந்தித்தனர். இதையடுத்து, மீண்டும் திங்கள்கிழமை  நியமன எம்எல்ஏ சாமிநாதன் உள்ளிட்டோர் ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்தனர்.
பின்னர், சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலவச அரிசி விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமி மக்களிடம் தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். அரிசி வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது. தரமற்ற அரிசியை வழங்குகின்றனர். நியாய விலைக் கடைகளில் 80 சதவீத அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. 20 சதவீத அரிசி வழங்கப்படவில்லை. நிகழாண்டில்  ரூ. 160 கோடி அரிசிக்காக ஒதுக்கப்பட்டது. கடந்த 17 மாதங்களாக மக்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை. அந்தப் பணம் எங்கே போனது எனத் தெரியவில்லை. 17 மாதங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு தலா 9 ஆயிரம் ரூபாயை வழங்கியிருக்க வேண்டும். ஒரு கிலோவுக்கு ரூ. 2 வீதம் ஊழல் செய்துள்ளனர். 
இது குறித்து ஆளுநர் கிரண் பேடியிடம் புகார் மனு அளித்தோம். இந்த ஊழல் குறித்து சிபிஐயிடம் புகார் தெரிவிப்போம். முதல்வர் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கந்தசாமியிடம் விசாரணை நடத்த பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரிடம் முறையிடுவோம் என்றார் அவர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT