தமிழ்நாடு

ஆவணி மூலத் திருவிழா: பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்

10th Sep 2019 12:54 AM

ADVERTISEMENT


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா ஆகஸ்ட் 26-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.   இந்நிலையில்,  விழாவில் ஒன்பதாம் நாளான திங்கள்கிழமை பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்  நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு சுவாமி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகள், கீழமாசி வீதி, யானைக்கல் வழியாக பழைய சொக்கநாத சுவாமி கோயில் வழியாகச் சென்று, விருதுநகர் இந்து நாடார்கள் உறவின்முறை பரிபாலன சபை திருக்கண் மண்டபம், குருசாமி சாஸ்திரிகள் திருக்கண் மண்டபம், மகாலிங்கய்யர் திருக்கண் மண்டபம், ஸ்ரீ சாரதா சமதி, ஸ்ரீ சாரதா வித்தியாவனம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி திருக்கண் மண்டபம் ஆகியற்றில் திருக்கண் மரியாதை ஏற்று, பிட்டுத்தோப்பு வாணிய வைசியர் மண்டபம், பிட்டுத்தோப்பு லீலை முடித்து ராமநாதபுரம் சமஸ்தான சேதுபதி மண்டபத்தில் தங்கினர். 
இதைத்தொடர்ந்து பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடலை கோயில் பட்டர்கள் நடத்திக் காட்டினர். இதில் பிற்பகல் 1.30 மணிக்குமேல் 1.54 மணிக்குள் தனுர் லக்கனத்தில் மண் சாத்துதல் நடைபெற்றது. இதில் கோயில் இணை ஆணையர் ந.நடராஜன் மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். 
பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடல் முடிந்ததை அடுத்து சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் புறப்பாடாகி ஆரப்பாளையம் பெ.பொன்னம்மாள் மண்டபத்துக்கு எழுந்தருளினர். அங்கிருந்து பொன்னகரம், ஒர்க் ஷாப் ரோடு வழியாக நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாசி வீதி, அம்மன் சந்நிதி வழியாக கோயிலை சென்றடைந்தனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT