வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

அஞ்சல் வங்கிக் கணக்கு: தேசிய அளவில் தமிழக வட்டம் முதலிடம் : ரவிசங்கர் பிரசாத் விருது வழங்கினார்

DIN | Published: 10th September 2019 02:28 AM
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் இருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் தமிழக வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர்  எம். சம்பத், ஐபிபிபி  தமிழகப் பிரிவுத் தலைவர் விஜயன் கேசவன்.


இந்திய அஞ்சல் பேமென்ட் வங்கி கணக்குகளை அதிக அளவில் தொடங்கி, தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழக அஞ்சல் வட்டத்துக்கு மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கினார்.
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியை (ஐபிபிபி) மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. இதன் முதலாம் ஆண்டு விழா தில்லி விஞ்ஞான் பவனில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கடந்த ஓராண்டில் இந்த அஞ்சல் வங்கி மூலம் ஒரு கோடி கணக்குகள் தொடங்கப்பட்டன. இதில் சிறப்பாகச் செயல்பட்ட மாநில வட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
 இந்நிகழ்வில், அதிக எண்ணிக்கையில் அஞ்சல் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியதற்காக தமிழக அஞ்சல் வட்டத்திற்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விருது வழங்கினார். இந்த விருதை தமிழக வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் (போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்) எம். சம்பத், ஐபிபிபி தமிழகப் பிரிவுத் தலைவர் விஜயன் கேசவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதேபோன்று, கேரளப் பிரிவு சார்பில் விருதுகளை அதன் அஞ்சல் துறைத் தலைவர் சாரதா சம்பத் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். இதேபோன்று, தில்லி, உத்தரப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசியதாவது: 
ஐபிபிபி எனும் அஞ்சல் வங்கி சிறப்பான சேவையை அளித்து வருகிறது. இந்த வங்கி தொடங்கிய ஓராண்டில் 1 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த ஓராண்டில் இந்த எண்ணிக்கையை 5 கோடியாக அதிகரிக்க வேண்டும். டிஜிட்டல் முறை பணப் பரிவர்த்தனை மிகுந்த பலனை அளித்து வருகிறது. வங்கிகளில் 34 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில், 22 கோடி கணக்குகள் ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன. 
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் 440 திட்டங்களின் தொகையை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றடைவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வகையில், ரூ.7.82 லட்சம் கோடி நேரடியாக பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாகப் பணம் சென்றடைந்துள்ளதால், ரூ.1.40 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டில் 30 கோடிக்கும் மேல் ஜன் தன் கணக்குகள் தொடங்க முடியும் எனும் போது, ஓராண்டில் 5 கோடி கணக்குகளை அஞ்சல் பெமென்ட் வங்கி மூலம் மேற்கொள்ள முடியும். டிஜிட்டல் முறையில் ஐபிபிபி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்த ஓராண்டுக்குள் ரூ.5 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும்.
 இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியும் இந்த நேரடிப் பணப் பரிமாற்றம் (டிபிடி) திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தற்போது பேமென்ட் வங்கியின் மூலம் 40 திட்டங்களுக்கு மட்டுமே பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஏழை, நலிவுற்ற மக்களுக்கு இந்த பேமென்ட் வங்கிச் சேவை அதிகளவில் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான திசையில் இந்த அஞ்சல் வங்கிச் சேவை அமைந்துள்ளது என்றார் ரவி சங்கர் பிரசாத்.
நிகழ்ச்சியின் போது, ஆதார் மூலம் பணம் வழங்கும் முறையிலான சேவைகள் இந்தியா அஞ்சல் பேமென்ட் வங்கியில் தொடங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அஞ்சல் துறைச் செயலர் ஏ.என். நந்தா, இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயலதிகாரி சுரேஷ் சேதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தமிழகத்தில் 3.98 லட்சம் கணக்குகள்! 
 தமிழகத்தில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி (ஐபிபிபி) மூலம் ஓராண்டில் 3.98 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் எம். சம்பத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது (ஐபிபிபி) 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவை தொடர்பு மையங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஓராண்டில் 1.30 லட்சமாக இந்த தொடர்பு மையங்கள் அதிகரித்துள்ளன. இது வங்கிக் கிளைகளை விட 2.5 சதவீதம் அதிகமாகும். இந்த மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. ஐபிபிபி மூலம் தமிழகத்தில் ஓராண்டில் 3.98 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இது நாட்டிலேயே அதிகம் என்ற அளவில் தேசிய அளவில் தமிழகத்திற்கு முதல் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழர்களுக்கே முன்னுரிமை: உரியச் சட்டத்திருத்தம் கொண்டுவர ஸ்டாலின் வலியுறுத்தல்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு 
கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள்: அறிவிப்பு வெளியீடு 
அக்டோபர் 6-ஆம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு: பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு     
பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை பணிகள் முழுக்க உள்ளூர் மக்களுக்கே!: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்