தமிழ்நாடு

அது கேந்திரவித்யாலயா பள்ளியில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் இல்லை: அம்பேத்கர் சர்ச்சை குறித்து பாஜக

7th Sep 2019 04:19 PM

ADVERTISEMENT

 

சென்னை: அது கேந்திரவித்யாலயா பள்ளியில் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் இல்லை என்று அம்பேத்கர் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து எழுந்த சர்ச்சை குறித்து தமிழக பாஜக விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி சனிக்கிழமையன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நேற்று முதல் சில அரசியல் கட்சிகள், கேந்திர வித்யாலயா பள்ளி 6 ம் வகுப்பு கேள்வி தாளில்  பட்டியலினத்தவர் மற்றும் இஸ்லாமியர்கள் குறித்து தவறான வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து பதிவிட்டும், விமர்சனம் செய்து வருவதும்  வன்மையாக  கண்டிக்கத்தக்கது. மேலும், தமிழகத்தின் சில கட்சி தலைவர்கள், மத்திய அரசு தான் இதற்கு காரணம் என்று சொல்லி வருவது முழு பொய் மட்டுமல்ல, மோசடி.

ADVERTISEMENT

தமிழக மக்களிடத்தில் இது போன்ற தவறான தகவல்களை சொல்லி பதட்டத்தில் ஆழ்த்துவதோடு, சாதிய, மத கலவரங்களை உருவாக்க முயல்கின்ற எதிர்க்கட்சிகள். சி பி எஸ் இ பள்ளி பாடத்திட்டத்தில் (NCERT) 6ம் வகுப்பு, சமூக அறிவியல் புத்தகத்தில் 'பன்முகத்தன்மை மற்றும் பாகுபாடு' என்ற அத்தியாயத்தில் இஸ்லாமியர்களின் நிலை குறித்தும்,  தலித்துகள் குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதோடு தீண்டாமையை ஒழிக்க வேண்டும், இஸ்லாமியர்கள் கல்வி ரீதியாக பின் தங்கிய சமுதாயமாக ஏன் உள்ளார்கள் போன்ற பல்வேறு உண்மைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பான பாடமாக அது அமைந்துள்ளது.

ஆனால், கேந்திரவித்யாலயா பள்ளிகளில் இது போன்ற கேள்வி தாள் எதுவும் தயாரிக்கப்படவில்லை என்பது தான் உண்மை. வேறு ஏதேனும் தனியார் சி பி எஸ் இ பள்ளிகளில் இது போன்று தயாரித்திருக்கலாம் அல்லது வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியில் மத்திய அரசுக்கும், கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கும் இழுக்கை ஏற்படுத்த வேண்டுமென்று திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூட இது நடந்திருக்கலாம். ஆனாலும் முழுவிவரத்தையும் அறியாமல் அரசியல் உள்நோக்கத்தோடு மாணவ மாணவிகளின் நெஞ்சில் நஞ்சை செலுத்தும் முயற்சிகளை கைவிடுவது சமுதாயத்திற்கு நல்லது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CBSC controversy 6th std question paper ambedkar muslims status TN BJP கேந்திர வித்யாலயா பள்ளி கேள்வித்தாள் சர்ச்சை அம்பேத்கர் இஸ்லாமியர் நிலை தமிழக பாஜக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT