தமிழ்நாடு

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்: முதல்கட்டத் தேர்வு நிறைவு

7th Sep 2019 04:14 AM

ADVERTISEMENT


மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள வீரர்களுக்கான முதல்கட்டத் தேர்வு நிறைவுபெற்றுள்ளது. 

அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு  அடுத்தபடியாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கான முயற்சியை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து,  ககன்யான் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தை வரும் 2022-ஆம் ஆண்டு நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக ரஷியா, பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்காக முதலில் 2 ஆளில்லா விண்கலன்களும், மனிதர்களைக் கொண்டு செல்லும் ஒரு விண்கலமும் தயாரிக்கப்பட உள்ளன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட பின்னர், இரண்டு முறை ஆளில்லா விண்கலன்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்படும். பின்னர், மூன்றாவது முயற்சியில் வீரர்களுடன் கூடிய விண்கலம் அனுப்பப்படும்.
இந்தத் திட்டத்துக்காக, விண்ணுக்கு அனுப்பப்படும் வீரர்களுக்கு ரஷியாவில் முறையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, மாஸ்கோவில் இஸ்ரோவின் தொழில்நுட்ப மையம் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை கடந்த மாதம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

முதல்கட்ட வீரர்கள் தேர்வு நிறைவு: ககன்யான் திட்டத்தின் கீழ் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள வீரர்களின் முதல்கட்டத் தேர்வு நிறைவடைந்துள்ளது. 
இந்த முதல்கட்டத் தேர்வை இந்திய விமானப் படையின் விண்வெளி மருத்துவ நிறுவனம் செய்துள்ளது. கடுமையான உடல் திறன் பரிசோதனை, ஆய்வகப் பரிசோதனைகள், கதிர்வீச்சு பரிசோதனைகள், மருத்துவப் பரிசோதனை, மனோதிடப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மூலம் இந்த வீரர்களின் முதல்கட்டத் தேர்வு நிறைவுபெற்றிருப்பதாக இந்திய விமானப் படையின் ஊடக ஒருங்கிணைப்பு மைய சுட்டுரை பக்கத்தில் புகைப்படங்களுடன் வெள்ளிக்கிழமை தகவல் வெளியிடப்பட்டது.

ரஷியாவில் பயிற்சி:  பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு தேர்வு செய்யப்படும் 30 விமானப்படை வீரர்களைக் கொண்ட பட்டியல் இம்மாத இறுதியில் இறுதிசெய்யப்படும். இவர்கள் 30 பேரும், பயிற்சிக்காக ரஷியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவர். 

இந்தப் பயிற்சியின் இறுதியில் 30 வீரர்களிலிருந்து 3 பேர் தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவர். இந்த மூன்று வீரர்களைத் தாங்கிச் செல்லும் விண்கலமானது, இந்தியாவின் சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT