தமிழ்நாடு

பொருளாதார நெருக்கடியை ஆட்சியாளர்கள் மறைக்கின்றனர்: இரா.நல்லகண்ணு குற்றச்சாட்டு

7th Sep 2019 02:01 AM

ADVERTISEMENT


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை ஆட்சியாளர்கள் மறைக்கின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.  மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது: 
  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இவ்வளவு  நாள் கழித்து, சிறையில் அடைக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் சிறைப்படுத்தி உள்ளனர். அந்த வழக்கு உண்மையா, பொய்யா என தீர்ப்பு வழங்கும்போது தெரியும். ஆனால், இது சரியான அணுகுமுறை இல்லை. எப்பொழுதோ பேசியதற்கு தற்போது வழக்கு போடுகிறார்கள். பிரதமரையோ, மத்திய ஆட்சியையோ விமர்சித்தாலே வழக்கு போடப்படுகிறது. இது பாஜக அத்துமீறலின் தொடக்கம் என்பதை காட்டுகிறது.  
நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மத்திய ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து விடுமுறை வழங்கப்படுவதோடு, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் மறுக்கப்படுகிறது. அனைத்து தொழில்களும் முடங்கி விட்டன. 
 நிதி நெருக்கடியால் தான் 27 அரசு வங்கிகள் 12 ஆக இணைப்பு, நிறுவனங்கள் மூடல், தங்கம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை ஆட்சியாளர்கள் மறைக்கின்றனர். ரூபாயின் மதிப்பு குறைந்து டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. தங்கம் சவரன் ரூ. 30 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. 70 ஆண்டுகளாக  இல்லாத பொருளாதார நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பினரே தெரிவித்துள்ளனர். 
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் மூடப்படுவது குறித்து தமிழக முதல்வருக்கு அக்கறை இல்லை. ஆனால் புதிய தொழில்களைத் தொடங்குவதாகக் கூறி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இருப்பது வினோதமாக உள்ளது என்றார்.  
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT