தமிழ்நாடு

பெரியார் சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி

7th Sep 2019 02:24 AM

ADVERTISEMENT


தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு கீழ் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.தெய்வநாயகம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 1967-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் அண்ணா திருச்சியில் பெரியார் சிலையை நிறுவினார். அப்போது அந்தச் சிலையின் கீழ் எந்தவொரு வாசகமும் இடம்பெறவில்லை. ஆனால் கடந்த 1973-ஆம் ஆண்டு பெரியார் மறைந்த பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளின் கீழ் கடவுள் இல்லை என்பது உள்ளிட்ட கடவுள் மறுப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. உண்மையில் பெரியார் பகுத்தறிவு கொள்கைகளை பரப்பினாரே தவிர நாத்திகத்தை போதிக்கவில்லை. எனவே சிலைக்கு கீழ் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில்மனுவில், பெரியாரின் சிலைக்கு கீழ் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் தீங்கு விளைவிக்க கூடியவை அல்ல. பொதுநல வழக்கு என்ற பெயரில், மனுதாரர் தனது சொந்த நலனுக்காக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். எனவே மனுதாரருக்கு பெரும்தொகை அபராதம் விதித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மாறுபட்ட தத்துவ சிந்தனைகளை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. கடந்த 1928-ஆம் ஆண்டு முதல் பெரியார் பேசிய உரைகள், எழுதிய கட்டுரைகள் அனைத்தும் கடவுள் மறுப்பு தொடர்பானவை தான். தஞ்சாவூரில் பெரியார் சிலை நிறுவப்பட்டபோது அந்த சிலையின் கீழ் கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக கடந்த 1970-ஆம் ஆண்டு அரசுக்கு அனுப்பப்பட்ட புகார் நிராகரிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான ரிட் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வாசகங்கள் பொது ஒழுக்கத்தைப் பாதிப்பதாக கருத முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்துள்ளது.
எனவே இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 19 மனுதாரருக்கு கடவுள் உண்டு என கருத்துத் தெரிவிக்க அனுமதி வழங்கியுள்ளதோ, அதே போன்று கடவுள் இல்லை என கருத்துத் தெரிவிக்க எதிர்மனுதாரருக்கு உரிமை வழங்கி உள்ளது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT