தமிழ்நாடு

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட செயல்பாடு நாமக்கல், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விருது: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்கினார்

7th Sep 2019 02:23 AM

ADVERTISEMENT


தேசிய அளவில் பெண் குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம் எனும் மத்திய அரசின் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திதற்காக தமிழகத்தின் நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு தில்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது.
பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் எனும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015, ஜனவரியில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேசிய அளவில் ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தரக்கண்ட், தில்லி ஆகிய ஐந்து மாநிலங்களும், தமிழகத்தின் திருவள்ளூர், நாமக்கல் உள்பட 20 மாவட்டங்களும் தேர்வு செய்யப்பட்டன.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கினார். தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை சிறந்த முறையில் உயர்த்தியதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும் அதன் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகப் பெண் பாலின பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தற்காக அதன் ஆட்சியர் மு.ஆசியா மரியம் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில், கடந்த 2014-15-ஆம் ஆண்டில் பிறப்பு பாலினி விகிதம் 918 ஆக இருந்தது. 2018-19-ஆம் ஆண்டில் இந்த விகிதம் 13 புள்ளிகள் அதிகரித்து 931 ஆக உயர்ந்துள்ளது. பிரதமர் அலுலவகம், மனித வள மேம்பாட்டு அமைச்சகம், சுகாதார-குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி நடவடிக்கையின் காரணமாக பெண்கள் தங்களது பிறப்பு முதல் வாழ்க்கையின் இறுதி வரையிலும் பாதுகாக்கப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் திருவள்ளுர் மாவட்டத்தில் பிறப்பு பாலின விகிதத்தை 925-இல் இருந்து 963 ஆக உயர்த்தியிருப்பது பாராட்டத்தக்கதாகும் என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் தேபஸ்ரீ செளத்ரி, துறையின் செயலர் ரவீந்திர பன்வர், கூடுதல் செயலர் கே. மோசஸ் சலாய் மற்றும் மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பிறகு நாமக்கல், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் தினமணி நிருபரிடம் கூறியதாவது:
நாமக்கல் ஆட்சியர் மு. ஆசியா மரியம்: நாமக்கல் மாவட்டத்தில் 2014-15-ஆம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 867 பெண் குழந்தைகள் என்ற அளவில் இருந்தது. 20-இல் மாவட்ட ஆட்சியராக நான் பொறுப்பேற்ற பிறகு, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தைச் செயல்படுத்த சுகாதாரத் துறை, சமூக நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியவை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பெண் குழந்தைகளைக் கருவிலேயே கலைத்தலைத் தடுத்தல், பெண் குழந்தைகள் பெற்ற தம்பதிகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
மேலும், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராமச் செவிலியர்கள் ஆகியோர் மூலம் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை கர்ப்பிணிப் பெண்களிடம் எடுத்துரைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாலினத்தைக் கண்டறிவதற்காக ஸ்கேன் பரிசோதனை மையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு இது தொடர்புடைய தடுப்புச் சட்டத்தின் கடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால், நாமக்கல் மாவட்டத்தில் 2019-இல் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 947 ஆக உயர்ந்துள்ளது.  
குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பெண் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதைப் பாராட்டும் வகையில் நாமக்கல் மாவட்டத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்: பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட செயல்பாட்டில் திருவள்ளூர் சிறந்த மாவட்டமாக தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2014-15-ஆம் ஆண்டில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 916 பெண் குழந்தைகள் என இருந்தது. கடந்த ஆண்டு 923 ஆக இருந்தது. 
தற்போது 963 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கருவிலேயே பாலினத்தைக் கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முத்துலட்சுமி அம்மையார் நினைவு உதவித் தொகை வழங்கும் திட்டச் செயல்பாட்டின் மூலம் தாய்மார்களின் நலன்கள் காக்கப்படுவதுடன், பெண் குழந்தைகளும் பாதுகாக்கப்படுகின்றன. கருக்கலைப்பு செய்யும் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளன. 
சோழவரம், பூண்டி வட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருந்தது. இத்திட்டம் அமலாக்கத்திற்குப் பிறகு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. தற்போது சிறந்த செயல்பாட்டுக்காக முதல் முறையாக தேசிய அளவில் சிறந்த மாவட்டமாகத் திருவள்ளூர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT