தமிழ்நாடு

நான்குனேரியில்  தனித்துப் போட்டியிடுகிறதா காங்கிரஸ்?

7th Sep 2019 03:23 AM | ஏ.வி.பெருமாள்

ADVERTISEMENT


மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் ஹெச்.வசந்தகுமார். அதுமுதலே, நான்குனேரி தொகுதி இடைத்தேர்தல் மீது  திமுக, காங்கிரஸின் பார்வை திரும்பிவிட்டது. காரணம், ஏற்கெனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற அந்தத் தொகுதியில் மீண்டும் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கைதான்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நான்குனேரி தொகுதி காங்கிரஸுக்காக ஒதுக்கப்பட்டது என்பதால், அங்கு மீண்டும் காங்கிரஸ் சார்பிலேயே வேட்பாளரை களமிறக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனின் உறவினரும், நெல்லை மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளை செயலருமான எஸ்.டி.டி. ராஜேஷ், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், ப.சிதம்பரத்தின் ஆதரவாளரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலருமான வானமாமலை, வசந்தகுமாரின் மைத்துனர் எம்.எஸ்.காமராஜ், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோரிடையே நான்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சியினர் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அங்கு தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டார்கள். நான்குனேரி தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள், அங்குள்ள அத்தியாவசியத் தேவைகள் ஆகியவற்றை கணக்கெடுத்து அது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது, நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது, பல்வேறு குறைகளைச் சுட்டிக்காட்டி போராட்டங்கள் நடத்துவது ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ADVERTISEMENT

அதேநேரத்தில் திமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் மகன் பிரபாகரன், மாவட்ட அவைத் தலைவர் கிரஹாம்பெல் உள்ளிட்டோர் நான்குனேரி தொகுதியில் போட்டியிடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கிரஹாம்பெல் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஞானதிரவியத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.  ஞானதிரவியம் வெற்றி பெற்று எம்.பி. ஆகிவிட்டதால், நான்குனேரி தொகுதியில் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் கிரஹாம்பெல் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
கிரஹாம்பெல் போன்றவர்களுக்கு நான்குனேரி இடைத்தேர்தலில் வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. அதனால் காங்கிரஸிடம் பேசி நான்குனேரி தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என திமுக தலைமையை நெல்லை மாவட்ட திமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸைப் பொருத்தவரையில் மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், அந்தக் கட்சியின் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் கைவசம் உள்ள நான்குனேரி தொகுதியையும் திமுகவுக்கு விட்டுக் கொடுத்தால், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்களிடையே கடுமையான அதிருப்தி ஏற்படும் சூழல் உள்ளது.

இந்த முறை நான்குனேரி தொகுதியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் நெல்லை மாவட்ட காங்கிரஸார் தீவிரமாக இருக்கிறார்கள். அதனை வெளிப்படுத்தும் விதமாகவே, நான்குனேரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில், நான்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

மேலும், கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம், நான்குனேரி தொகுதியை எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்புமிக்க நெல்லை தொகுதியை காங்கிரஸ் இழந்தபோதே, தொண்டர்கள் மிகுந்த விரக்தியடைந்தனர். நான்குனேரியையும் இழந்தால், அது நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும் என நெல்லை மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெல்லை மாவட்ட நிர்வாகிகளின் உணர்வை புரிந்துகொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,  நான்குனேரி இடைத்தேர்தல் விஷயத்தில் கூட்டணிக் கட்சியினருடன் கலந்துபேசித்தான் முடிவு செய்யப்படும் என ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். தற்போதைய நிலையில் தனித்துப் போட்டியிடுவது குறித்து கே.எஸ்.அழகிரி வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும், நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதுதான் தீர்வாக அமையும்  என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நான்குனேரி தொகுதியை திமுக விட்டுக்கொடுக்காதபட்சத்தில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதே கட்சிக்கு நல்லது என்ற முடிவுக்கு அக்கட்சி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT