தமிழ்நாடு

திமுக ஆட்சி: ஸ்டாலின் கனவு பலிக்காது 

7th Sep 2019 02:14 AM

ADVERTISEMENT


திமுக ஆட்சிக்கு வரும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார், அது ஒருபோதும் நனவாகாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
 பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.கே.மூக்கையா தேவரின் நினைவு தினத்தையொட்டி, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உள்ள நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றவர் பி.கே.மூக்கையா தேவர். அவரது தியாகத்தைப் போற்றும் வகையில், நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும், பி.கே.மூக்கையா தேவரும் சகோதரர்களாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் நன்மைக்காக போராடி உரிமைகளை பெற்றுத் தந்தவர்கள். அவர்களது புகழ் என்றென்று நிலைத்து நிற்கும்.
திமுக தான் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது, அவர் கனவு உலகில் இருப்பதைக் காட்டுகிறது. திமுக ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை, ஸ்டாலினின் கனவு நனவாகப் போவதும் இல்லை.
ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்தைப் பொருத்தவரை, அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு வழங்குவதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். அதன்படி தற்போதும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்களும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளவர்களும் குடும்ப அட்டைகள் மூலமாக பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். அந்தந்த மாநிலங்களுக்குத் தேவைப்படும் உணவை, மானியமாக மத்திய அரசு தந்துவிடுகிறது. ஆகவே, இதில் எந்த பாதிப்பும் இல்லை. 
தமிழக முதல்வரின் வெளிநாடு சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அவர் தமிழகம் வரும்போது உறுதியாக  நல்ல பல திட்டங்களைக் கொண்டு வருவார் என்றார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, எஸ்.டி.கே.ஜக்கையன், பா.நீதிபதி, கே.மாணிக்கம், பி.பெரியபுள்ளான் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT