தமிழ்நாடு

தலைமை நீதிபதி இடமாற்றம்: கொலீஜியத்துக்கு வழக்குரைஞர்கள் கடிதம்

7th Sep 2019 02:27 AM

ADVERTISEMENT


சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீயை மேகாலய மாநில உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யும் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் கொலீஜியத்துக்கு (நீதிபதிகள் குழு) கடிதம் அனுப்பியுள்ளனர். 
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் மாசிலாமணி, ஆர்.வைகை, என்.ஜி.ஆர். பிரசாத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ, 3 நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலய மாநில உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான அகில இந்திய அளவிலான சீனியாரிட்டியில் தற்போது மூத்தவராக இருப்பவர் வி.கே.தஹில ராமாணீ. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் முன்னரே மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். 
இத்தகைய பழைமையான நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி பொறுப்பு வகித்த அவரை மேகாலய மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றியிருப்பது, அவரை அவமதிப்பதற்கு ஒப்பாகும். 
எனவே அவரது இடமாற்ற உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர். 
அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீயை மேகாலய உயர்நீதிமன்றத்துக்கு  இடமாற்றம் செய்யவும், அந்த மாநிலத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT