தமிழ்நாடு

சித்தா, ஆயுர்வேத படிப்புகள்: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

7th Sep 2019 03:27 AM

ADVERTISEMENT


சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.
பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.
அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் என  6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள்  உள்ளன. 
 எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. 
இந்நிலையில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.
இருப்பினும், அதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியிருந்தார். ஆனால், அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து, நிகழாண்டில் நீட் தரவரிசை அடிப்படையிலேயே  அப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி,  பிஎஸ்எம்எஸ் (சித்தா), பிஏஎம்எஸ் (ஆயுர்வேதம்), பியூஎம்எஸ் (யுனானி), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது.
இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் 13-ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய அவகாசம் இருப்பதால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் வரும் 13-ஆம் மாலை 5.30 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர், அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT