தமிழ்நாடு

ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டம்: எம்எல்ஏக்களிடம் கருத்தறிந்து முடிவு

7th Sep 2019 02:20 AM

ADVERTISEMENT


ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டம் குறித்து அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களிடமும் கருத்துகளைக் கேட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக புதுவை பேரவையில் வெள்ளிக்கிழமை உடனடி கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்:
ஆ.அன்பழகன் (அதிமுக): கூலித் தொழிலாளர்கள் நாடு முழுவதும் இடம் பெயர்ந்து பணி செய்கின்றனர். அவர்களின் நலனுக்காக ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. புதுவையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் கூலி வேலை செய்கின்றனர். இந்த திட்டத்தின் மூலம் அவர்கள் பயனடைவர். தமிழக அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் புதுவை அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.
மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று புதுவையில் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான சட்டம் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என முதல்வர் ஏற்கெனவே அறிவித்தார். சனிக்கிழமையுடன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிவடைதால், இந்தச் சட்டம் எப்போது கொண்டு வரப்படும் என்று முதல்வர் பதிலளிக்க வேண்டும்.
முதல்வர்  நாராயணசாமி: ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை திட்டம் தொடர்பாக தில்லியில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டார். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் 2-ஆவது கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள இயலவில்லை. இந்தத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முடியாது. அதன் சாதக, பாதக அம்சங்களை ஆராய வேண்டும். எம்எல்ஏக்கள் அனைவரிடமும் கருத்துகளைக் கேட்ட பிறகு உரிய முடிவெடுக்கப்படும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT