தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

7th Sep 2019 01:21 AM

ADVERTISEMENT


ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தின் குடகு மற்றும் கடலோர மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதாலும்,  கேரள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்வதாலும், கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு  நீர்வரத்து அதிகரித்து, அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கர்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி,  காவிரி ஆற்றில் உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்,  வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 28 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீர் நீர்வரத்து,  வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்து,  தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது.
 மேலும்,  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து,  மதிய நிலவரப்படி நொடிக்கு 62 ஆயிரம் கன அடியாகவும்,  மாலை நிலவரப்படி மேலும் தண்ணீரின் அளவு அதிகரித்து 70 ஆயிரம் கன அடியாகவும் வந்து கொண்டிருக்கிறது.  காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால்,  நடைபாதை, பிரதான அருவிகள், சினி அருவிகள் மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகள் மூழ்கி வருகின்றன.
     ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால்,  சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, பரிசல்கள் இயக்க 2-ஆவது நாளாகவும், அருவிகளில் குளிக்க 30-ஆவது நாளாகவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.  கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் இறங்காமல் இருக்க பிரதான அருவி செல்லும் நடைபாதை,  முதலைப் பண்ணை, ஊட்டமலை மற்றும் ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT