தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் பதவி உயர்வு பட்டியலுக்கு தடை கோரி வழக்கு: செயலர், ஆணையர்  பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

7th Sep 2019 01:59 AM

ADVERTISEMENT


இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர்கள் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க தடை கோரும் வழக்கில், அத்துறையின் செயலர், ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தவிட்டது.
இந்து சமய அறநிலையத்துறையில் உதவி ஆணையர்களாக உள்ள ஜீவானந்தம், சுரேஷ், செல்வி, சூரியநாராயணன், ராணி, இளையராஜா ஆகியோர் தாக்கல் செய்த மனு: 
நாங்கள் இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர்களாக பணியில் சேர்ந்து, தற்போது பதவி உயர்வு பெற்று உதவி ஆணையர்களாக பணியாற்றி வருகிறோம். துறையில் காலியாக உள்ள துணை ஆணையர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு நீதித்துறை பணியில் உள்ளவர்கள் இடமாறுதல் மூலமாகவும், உதவி ஆணையர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், நேரடி மற்றும் ஒப்பந்த அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவர். இதில், 60 சதவீதம் காலி பணியிடங்களில் செயல் அலுவலர்களாக இருந்து பதவி உயர்வு பெற்ற உதவி ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்படும். ஆனால் இந்த விதிமுறைகளை பின்பற்றாமல், நேரடியாக நியமிக்கப்பட்ட உதவி ஆணையர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே உதவி ஆணையர்கள் பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்ட பின்பே துணை ஆணையர் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். துணை ஆணையர் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
 இந்த மனு நீதிபதி வி.எம். வேலுமணி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை செயலர் மற்றும் ஆணையர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT