தமிழ்நாடு

காலாவதியான சுங்கச்சாவடிகளில் இன்னும் கட்டண வசூலா?: கொ.ம.தே. கட்சி கண்டனம் 

4th Sep 2019 05:36 PM

ADVERTISEMENT

 

சென்னை: காலாவதியான சுங்கச்சாவடிகளில் இன்னும் சுங்க கட்டண வசூலா? என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கண்டணம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது 

தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த சுங்க கட்டண உயர்வால் அன்றாடம் மக்கள் பயன்படுத்தப்படும்  அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் நிலை உருவாகியிருக்கிறது. ஏற்கனவே வாழ வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களின் தலையில் சுங்க கட்டண உயர்வு மூலம் கூடுதல் சுமையை மத்திய அரசு இறக்கி வைத்திருக்கிறது. காலாவதியான பல சுங்கச்சாவடிகளில் இன்னும் சுங்க கட்டண வசூலை நிறுத்தாமல் தொடர்ந்து வசூலித்து வருவது ஏற்புடையதல்ல. லாரி தொழில் பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்து வரும் சூழ்நிலையில் இந்த சுங்க கட்டண உயர்வு மேலும் பாதிப்பையும், சிக்கலையும் உருவாக்கும்.

ADVERTISEMENT

இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் சூழலில் மக்களின் கைகளில் இருக்கும் கொஞ்சநஞ்ச பணத்தையும் கட்டண உயர்வு என்ற போர்வையில் மத்திய அரசு பிடுங்கி கொள்ள நினைப்பது வேதனையளிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள சிறு, குறு தொழில்கள் மட்டுமல்ல பெரிய நிறுவனங்களும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இலட்சக்கணக்கானோர் வேலையை இழந்து நிர்கதியாய் நிற்பதற்கு மத்திய அரசு தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் வேலையிழப்புகளை தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டு தொழில் முனைவோர்களின் பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகள் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டு தற்போது வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கிறோம் என்று சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. எனவே இந்த கட்டண உயர்வு அனைத்துதரப்பு மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கி வருவதை மத்திய அரசு புரிந்துக்கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் அமல்படுத்திய சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : சுங்கச்சாவடி KMDK கட்டண வசூல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் tamilnadu toll gates toll charges rise general secretary easwaran toll gate charges
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT