தமிழ்நாடு

இதற்காகத்தான் ப.சிதம்பரத்தின் கைது: எதைச் சொல்கிறார் ஸ்டாலின்? 

4th Sep 2019 06:33 PM

ADVERTISEMENT

 

சென்னை: ப.சிதம்பரத்தின் கைதுக்கான காரணம் என்ன என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் மேலாளர் பத்மநாபன் இல்லத் திருமண விழாவில் புதனன்று கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். அவர் பேசிய விவரம்  பின்வருமாறு:

இன்றைக்கு நாடு எங்கே போய்க்கொண்டிருக்கின்றது என்பதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றோம். இந்தியாவின் பொருளாதரம் பற்றி தொடர்ந்து கடந்த 10 நாட்களாக பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கக்கூடிய செய்தி என்னவென்று பார்த்தீர்களென்றால், 5 சதவிகிதத்திற்கு கீழே போயிருக்கக்கூடிய ஒரு கொடுமை இன்றைக்கு இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கின்றது.

ADVERTISEMENT

27 ஆண்டுகாலமாக இந்தியாவிற்கு இல்லாத ஒரு கொடுமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது என்று செய்திகள் வந்திருக்கின்றது. அந்த செய்திகள் கூட பத்திரிகைகளில் படிக்க முடிகின்றதா என்றால் இல்லை! அல்லது, ஊடகங்களில் பார்க்க முடிகின்றதா என்றால் இல்லை! அதை மூடி மறைக்கக்கூடிய திட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால், சமூகவலைதளங்களில் அவைகள் எல்லாம் இன்றைக்கு வெளிவந்துகொன்டிருக்கின்றது. எனவே, இப்படிப்பட்ட நிலையில் நாடு இன்றைக்கு சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றது.

இவற்றையெல்லாம் மூடி மறைப்பதற்காகத்தான், ப.சிதம்பரத்தின் கைது – காஷ்மீர் பிரச்சினை இது போன்ற முறைகளை இன்றைக்கு கையாண்டு கொண்டிருக்கின்றார்கள். அது ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தில் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை என்னவென்று, பார்த்தீர்கள் என்றால், முதலமைச்சர் வெளிநாட்டிற்கு சென்றிருப்பது. அதனை மக்கள் இரசிப்பார்கள் – வாழ்த்துவார்கள்.

முதலமைச்சர் வெளிநாட்டிற்கு சென்றிருக்கின்றார் முதலீடு ஏதாவது கொண்டுவருவார் என்று எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால், தற்போது ஒரு கேபினெட்டே சென்றுள்ளது. ஒரு சுற்றுலா அமைச்சரவையாக அ.தி.மு.க அமைச்சரவை மாறியிருக்கின்றது. ஏற்கனவே, இதே தமிழ் நாட்டில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் 2.42 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டே பெற்றோம் என்ற ஒரு செய்தியினை வெளியிட்டார்கள். அதற்கடுத்து அவர் மறைந்ததற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொறுப்பேற்று 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது.  அதில், ஏறக்குறைய 3 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளோம் என்ற செய்தியினை வெளியிட்டார்கள்.எனவே, இரண்டிற்குமான கணக்கீடும் 5 இலட்சம் கோடிக்கு மேல் முதலீடு வந்திருக்கின்றது என்று பார்க்கின்றோம்.

எவ்வளவு முதலீட்டை நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள்? அதில் எவ்வளவு முதலீட்டாளர்கள் இன்றைக்கு தொழில் துவங்க முன்வந்துள்ளனர். அதில், எத்தனை தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு  கிடைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடுங்கள் என்று, ஏதோ தெருவில் அல்ல, சட்டமன்றத்தில் நான் பேசினேன். ஆனால், இன்று வரையில் வெளியிடப்படிருக்கின்றதா என்றால் இல்லை. எனவே, இந்த நிலையில் இப்போது நீங்கள் வெளிநாட்டிற்கு போயிருக்கின்றீர்கள்.

இன்றைக்கு காலையில் செய்தியினைப் பார்க்கின்ற போது ஏறக்குறைய 16 தொழிற்சாலைகள் வரப்போகின்றது என்ற ஒரு செய்தி வந்துகொண்டிருக்கின்றது. எனவே, இவைகளெல்லாம் ஒரு அறிவிப்பாக இருந்துகொண்டிருக்கின்றதே தவிர இவைகள் எல்லாம் விரைவில் செயல்படுத்தக்கூடிய நிலையில் இருக்கின்றதா!? என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்!

இவ்வாறு அவர் பேசினார்.

Tags : p.chidambaram arrest DMK president stalin congress leader சிதம்பரத்தின் கைது திமுக தலைவர் சென்னை திருமண விழா ஸ்டாலின் பேச்சு marriage function speech anna arivalayam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT