தமிழ்நாடு

சிறப்புக் கட்டுரை: திமுகவில் குவியும் மாற்றுக்கட்சியினர்! பதவி ஆசை தான் காரணமா?

4th Sep 2019 01:23 PM | Muthumari

ADVERTISEMENT

 

தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதி மறைவையடுத்து, கட்சியை ஸ்டாலின் எவ்வாறு வழிநடத்தப்போகிறார் என்பது தான் தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் தலைவர்களின் கேள்வியாக இருந்தது. கருணாநிதி அளவுக்கு ஸ்டாலினுக்கு அரசியல் அறிவும், அனுபவமும் இல்லை என்றே பலர் கருதினர். 

மேலும், தலைவர் பதவி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டால், மு.க.அழகிரி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்க, குடும்பத்தில் கலவரம் உண்டாகும் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஸ்டாலின் இந்த கணிப்புகளை எல்லாம் உடைத்தெறிந்து கட்சியை வளர்ச்சிப்பணியை நோக்கி கொண்டு செல்கிறார் என்பதற்கு மக்களவைத் தேர்தல் முடிவுகளே ஒரு சாட்சி ஆனது. 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் புதுச்சேரி சேர்த்து தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில், 38 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இத்தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும், மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 13 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. இது திமுகவின் மிகப்பெரும் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. 

ADVERTISEMENT

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே, திமுக தரப்பின் பல்வேறு முயற்சிகளாலும், தினகரனிடம் அதிருப்தியில் இருந்த காரணத்தினாலும் செந்தில் பாலாஜி அதிரடியாக திமுகவில் இணைந்தார். இது அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட ஒரு நிகழ்வாகும். 

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

செந்தில் பாலாஜி முன்னதாக திமுகவில் இருந்தவர். இவர், அதிமுகவில் இணைந்து கரூர் தொகுதி எம்.எல்.ஏ, போக்குவரத்துத் துறை அமைச்சர், மாவட்ட அளவிலான பதவிகள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

தொடர்ந்து, அமமுகவில் இணைந்து, அதன்பின்னர் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் திமுகவில் இணைந்தார். உடனடியாக அவருக்கு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு அதில் அவர் வெற்றியும் பெற்றார்.

இதையடுத்து, அதிமுகவில் இருந்து பின்னர், அமமுகவில் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளா் பொறுப்பில் இருந்த வி.பி.கலைராஜன், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் அறிவித்தார்.

இதற்கு மறுநாளே, வி.பி.கலைராஜன், திமுகவில் இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும், பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் திமுகவில் இணைவார்கள் என்று தெரிவித்தார். இவருக்கு இலக்கிய அணி இணைச் செயலாளர் பதவி வழங்கி சிறப்பித்தது திமுக. 

வேலூர் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ஞான சேகரன், அதிமுகவில் இணைந்து பின்னர் அமமுகவில் அமைப்புச் செயலாளராக பணியாற்றி வந்தார். செந்தில் பாலாஜி, கலைராஜனைத் தொடர்ந்து இவரும் பின்னர் திமுகவில் இணைந்தார்.   

அடுத்ததாக, அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன். அதிமுகவிலிருந்து விலகி தினகரன் கட்சியில் இருந்து வந்தார். தினகரனுக்கு அடுத்து அக்கட்சியில் முக்கியமான ஒருவராக பார்க்கப்பட்ட அவர், தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

தங்கத்தமிழ்ச் செல்வன் இணைந்த அந்த சமயத்திலே, அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்று பேச்சு அடிபட்டது. இந்நிலையில், அவருக்கு திமுகவில் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வழங்கி கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 

மேலும், கட்சிக்கு முரணான செயலில் ஈடுபட்டதால் திமுக செய்தித் தொடர்புச் செயலாளராக இருந்த டி.கே.எஸ் இளங்கோவனிடம் கடந்த ஆண்டு அக்டோபரில் அந்தப் பதவி பறிக்கப்பட்டது.  அவரைத் தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு, அவருக்கு மீண்டும் அதே பதவியை வழங்கி திமுக அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம், அமமுகவின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பரணி கார்த்திகேயன், அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இவர், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ரத்தினசபாபதியின் சகோதரர் ஆவார். ரத்தின சபாபதி  ஏற்கனவே தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில், பின்னர் மனம் மாறி அதிமுகவுக்கே எனது ஆதரவு என்று தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

பரணி கார்த்திகேயன், அதிமுக எம்.எல்.ஏவின் சகோதரர் என்பதால், அவருக்கு இணையாக, பரணி கார்த்திகேயனுக்கு திமுகவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதனால் வேறு கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்தால் கண்டிப்பாக கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டதாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. கட்சியில் அங்கீகாரம் கிடைக்காத நிலையிலேயே இதுபோன்ற கட்சித் தாவல்கள் நடைபெறுகிறது என்ற கருத்தும் தமிழக அரசியலில் நிலவுகிறது. 

வலுவிழந்ததா தினகரன் கட்சி?

ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்கு பிறகு பெரிதாக பார்க்கப்பட்ட தினகரன் கட்சி கடந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகளை விட குறைவான வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே, இனி அமமுகவில் இருப்பது தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவாது என்று எண்ணியே வேறு கட்சியில் பெறுவதாக, ஏற்கனவே கட்சியில் இருந்து விலகியவர்கள் தெரிவித்துள்ளனர். 

திமுகவின் வியூகம்:

அதே நேரத்தில், தற்போது புதிய கட்சிகள் உருவெடுத்து வருவதாலும், தமிழகத்தில் தடம் பதிக்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் முயற்சித்து வருவதாலும், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ஸ்டாலின், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய புள்ளிகளை இணைத்து, கட்சிக்கு வலு சேர்ப்பதாக ஸ்டாலினுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளதாக சில கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாகவே, மேலும் பலர் திமுகவில் இணைவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். 

Tags : DMK stalin ஸ்டாலின் Thangatamil selvan Political story தங்கத்தமிழ்ச் செல்வன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT