வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

62 மருந்துகளுக்கு தடை: தகவல்களைக் கோருகிறது மருந்து ஆலோசனை வாரியம்

DIN | Published: 04th September 2019 02:36 AM


 62 மருந்துகளின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது குறித்து விரைவில் முடிவெடுக்க உள்ளதாக மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் (டிடிஏபி) தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மருந்துகளின் மூலக்கூறு தகவல்கள், எதிர் விளைவுகள் உள்ளிட்ட விவரங்கள், கருத்துகளை வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு அதன் உற்பத்தியாளர்களுக்கும், பயன்பாட்டாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 4,200 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. மத்திய அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பொது சுகாதார மையங்கள், காசநோய், எய்ட்ஸ் தடுப்பு மையங்கள், ராணுவ மருந்தகங்கள் உள்ளிட்டவற்றுக்குத் தேவையான மருந்துகளை அந்த உற்பத்தி நிறுவனங்கள் விநியோகித்து வருகின்றன.
இதன் காரணமாக ஆண்டுதோறும் ரூ.1.18 லட்சம் கோடி விற்றுமுதல் ஈட்டும் துறையாக மருந்துத் துறை விளங்குகிறது. பொதுவாகவே, சந்தையில் விற்பனையாகும் மருந்துகள், அவற்றின் மூலக்கூறு பொருள்கள் ஆகியவற்றை அவ்வப்போது மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம், ஆலோசனை வாரியம் ஆகியவை பரிசோதனைக்குட்படுத்துவது வழக்கம்.
இந்த நிலையில், 328 மருந்துகள் உள்கொள்வதற்கு உகந்தது அல்ல எனக் கூறி அவற்றுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டன. 
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட மருந்துகளை தடை செய்வது குறித்து மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியமே முடிவு செய்யலாம் எனத் தீர்ப்பு வழங்கியது.
அதன் அடிப்படையில் 80-க்கும் மேற்பட்ட மருந்துகள் மீதான தடையை அந்த வாரியம் உறுதி செய்தது. மேலும், 83 மருந்துகள் பரிசீலனைப் பட்டியலில் வைக்கப்பட்டன. இந்த நிலையில், 62 மருந்துகள் மீதான தடையை உறுதி செய்வது குறித்த முடிவை விரைவில் ஆலோசனை வாரியம் எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவை தொடர்பான விவரங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வாறு எந்த புதிய விவரங்களும் கிடைக்கப் பெறாத பட்சத்தில் ஏற்கெனவே, தங்களிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் முடிவு எடுக்க உள்ளதாக மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிக்கை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய (சிடிஎஸ்சிஓ) இணையதளத்தில் (https://cdsco.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழர்களுக்கே முன்னுரிமை: உரியச் சட்டத்திருத்தம் கொண்டுவர ஸ்டாலின் வலியுறுத்தல்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு 
கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள்: அறிவிப்பு வெளியீடு 
அக்டோபர் 6-ஆம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு: பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு     
பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை பணிகள் முழுக்க உள்ளூர் மக்களுக்கே!: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்