தமிழ்நாடு

3 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கூடுதலாக ஒதுக்க வேண்டும்: தில்லி கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

4th Sep 2019 04:35 AM

ADVERTISEMENT


மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்
கிழமை நடைபெற்ற மாநில உணவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை மாநில உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்கள் பங்கேற்ற ஐந்தாவது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உணவு, பொது விநியோகம், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பங்கேற்றார். 

மேலும், அத்துறையின் முதன்மைச் செயலர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் சுதாதேவி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:
 அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம், விலையில்லா அரிசித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தும் ஒரே மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் அனைத்து வகையிலும் கணினிமயமாக்கப்பட்ட பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சைலோ கட்டமைப்புகள், கிடங்குகள் சிறப்பு வாய்ந்த வகையில் வடிவமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ், உணவுப் பொருள் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடை வரை உணவுப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் 3 ஆயிரம் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அனைத்துக் கிடங்குகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கணினிமயமாக்கப்பட்டுள்ளது.

ரேஷன் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் நாட்டிலேயே தமிழகம் முன்னுதாரணமாக இருப்பதாக மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உணவு அமைச்சர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 
அதில், தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்க வலியுறுத்தப்பட்டது. இந்த கூடுதல் அரிசியை வழங்கும் போது மாநில அரசுக்கு ரூ.1,000 கோடி கூடுதல் செலவு தவிர்க்கப்படும். தமிழகத்தின் மண்ணெண்ணெய் தேவை கூடுதலாக உள்ளது. 

ADVERTISEMENT

ஆனால், வழங்கப்படும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் காலத்தில் இந்த அளவை 23,035 கிலோ லிட்டராக உயர்த்தித் தர வேண்டும். சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில், பருப்பு ஆகியவற்றுக்கு நிறுத்தப்பட்டுள்ள மானியத்தை வழங்கவும் வலியுறுத்தினோம். 
தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. வடமாநில காரிஃப் சீசனும், தமிழகத்தின் நெல் சீசனும் ஒரே நேரத்தில் இருப்பதில்லை. இதனால், செப்டம்பர் மாதத்திலும் நெல் கொள்முதல் செய்வதற்கு, அரிசியை ஒப்படைப்பதற்கான காலத்தை அக்டோபர் வரை நீட்டிக்கவும், அரிசியை டெபாசிட் செய்த வகையில் தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய ரூ.330 கோடியை வழங்கவும் கூட்டத்தில் தமிழகம் தரப்பில் கோரப்பட்டது. 


ஒரே தேசம், ஒரே ரேஷன் திட்டம்: மத்திய அரசு அறிமுகப்படுத்தும் இந்த திட்டத்தில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. தமிழக அரசைப் பொருத்தமட்டில், அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். தமிழக மக்களுக்கு எவ்விதத்திலும் பொதுவிநியோகத் திட்டத்திற்கும், விலையில்லாத அரிசி திட்டத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் அந்த விவகாரத்தில் தமிழகத்தின் நடவடிக்கைகள் அமையும். 
தமிழகத்திற்குத் தேவையான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒவ்வொரு மாதமும் வழங்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வரின் கடிதத்தை மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைத் தனித் தனியாக சந்தித்து வழங்கினோம். 
அப்போது, தமிழகத்திற்கு தேவையான மண்ணெண்ணெய்யை ஒதுக்கீடு செய்யப் பரிசீலிப்பதாக அவர்கள் கூறினர் என்றார் அமைச்சர் 
காமராஜ்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT