தமிழ்நாடு

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழா: மாணிக்கம் விற்ற திருவிளையாடல்

4th Sep 2019 12:55 AM

ADVERTISEMENT


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத்திருவிழாவையொட்டி மாணிக்கம் விற்ற திருவிளையாடல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த ஆகஸ்ட் 26 -இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் பவனி வந்து அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவிளையாடல் நிகழ்ச்சிகள் தொடங்கின. 

இந்நிலையில் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை மாணிக்கம் விற்ற திருவிளையாடல் நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணியளவில் சுவாமி, அம்மன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கீழச்சித்திரை வீதி, தெற்காவணி மூல வீதி, காசுக்கார செட்டியார் மண்டபம், கான்சாமேட்டுத்தெரு, தெற்கு மாசி வீதி, பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு வெளி வீதி, ஒண்டிமுத்து பிள்ளை மண்டபத்தில் எழுந்தருளினர். இதையடுத்து மாணிக்கம் விற்ற திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ந. நடராஜன், ஊழியர்கள் செய்திருந்தனர்.

மாணிக்கம் விற்ற திருவிளையாடல் தத்துவம்: மதுரையை நீதியுடன் ஆண்டு வந்த வீரபாண்டிய மன்னனுக்கு ஆண் மகன் பிறந்த நிலையில் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற மன்னன் புலி தாக்கி உயிரிழந்தான். இதைத்தொடர்ந்து மன்னனின் காமக்கிழத்தியரின் மக்கள் அரண்மனைக்குள் புகுந்து செல்வங்களையும்,  மணிமகுடத்தையும் கவர்ந்து சென்றனர்.

இதனால் இளவரசனுக்கு முடிசூட்ட அமைச்சர்கள் முடிவு செய்தனர். மணிமகுடம் களவு போனதை அறிந்து சோமசுந்தர பெருமானிடம் முறையிட கோயிலுக்குச் சென்றனர்.  அப்போது சோமசுந்தர பெருமானே ஒரு நவரத்தின வியாபாரியாக அங்கு வந்து நடந்ததை கேட்டறிந்து புதிய மணிமகுடம் செய்ய விலையுயர்ந்த நவமணிகளை கொடுத்து அம்மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார் எந்த மணியை அணிய வேண்டும் போன்ற விவரங்களையும் கூறினார்.

ADVERTISEMENT

புதிய மகுடத்தைச் சூட்டி இந்த குமாரனை அபிடேக பாண்டியன்  என்று அழையுங்கள் என்று கூறி அங்கிருந்து மறைந்தார்.  கவர்ந்து செல்லப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைக்கப் பெற்று மக்கள் நலமுடன் வாழ்ந்தனர். அபிடேக பாண்டியனும் நீதி நெறி வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்பதே புராண வரலாறு.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT