தமிழ்நாடு

நூறு நாள் திட்டப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையுடன் தொழிற்பயிற்சி: ராமதாஸ் வரவேற்பு

4th Sep 2019 01:41 AM

ADVERTISEMENT


தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பயனாளிகளுக்கு ஊக்கத் தொகையுடன் தொழிற்பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கிராமப்புறங்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யவும், பாசனக் கட்டமைப்புகளை உருவாக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 100 நாள்கள் வரை வேலை வழங்கப்படும். மாநிலத்தைப் பொருத்து ஒரு நாளைக்கு ரூ.168 முதல் ரூ.273 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.224 ஊதியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒரே மாதிரியான  வேலை வழங்கப்படுவதால், தொழிலாளர்கள் புதிதாக கற்றுக்கொள்ள எதுவுமில்லை. இந்த நிலையை மாற்றும் நோக்கத்துடன் இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்குத் தொழிற்பயிற்சி வழங்க அரசு முன்வந்துள்ளது.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள இத்திட்டத்தின்படி, 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு இயற்கை உரம் தயாரிப்பு, அறுவடை செய்யப்பட்ட தானியங்களைச் சேமித்து வைத்தல் ஆகிய பணிகள் குறித்து குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, கொத்தனார், பிளம்பர் போன்ற பணிகளுக்கு 40 நாள்கள் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. 
இந்தப் பயிற்சியில்  பங்கேற்க விரும்புவோருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவதுடன், ஒரு நாளைக்கு ரூ.250 வரை ஊக்கத் தொகையாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் முதல் இப்பயிற்சி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது என்று ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமர்ஜித் சின்ஹா கூறியுள்ளார். இந்தத் திட்டம் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT