தமிழ்நாடு

தெலங்கானா ஆளுநராக சிறப்பாகச் செயல்படுவேன்:  தமிழிசை சௌந்தரராஜன்

4th Sep 2019 02:23 AM

ADVERTISEMENT


தனக்கு வழங்கப்பட்டுள்ள பதவியில் சிறப்பாகச் செயல்படுவேன் என்று தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 
ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டதற்கான குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட உத்தரவை தெலங்கானா மாநிலத்தின் உறைவிட ஆணையர் வேதாந்தம் கிரி சென்னையில் செவ்வாய்க்கிழமை வழங்கினார். தனது இல்லத்துக்கு வந்த அவரை வரவேற்ற தமிழிசை, அந்த நியமன உத்தரவை பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு தமிழிசை அளித்த பேட்டி:-
தெலங்கானா மாநிலத்தில் இருந்து நியமன ஆணையை ஒப்படைக்க வேண்டுமென வந்துள்ளனர். இது தமிழகத்துக்கும், எனது வாழ்க்கைக்கும் மகிழ்ச்சியான தருணம். தமிழகத்தின் மகளாக மிகப்பெரிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். தேசியக் கட்சியின் அங்கத்தினராக இருந்த நான், ஆளுநராக செல்கிறேன் என்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்துக்கும், தெலங்கானாவுக்கும் பாலமாக இருந்து தமிழ் மகளாகச் செயல்படுவேன்.
பதவியேற்பு எப்போது?: பதவியேற்பு தொடர்பாக சில ஆலோசனைகள் செய்ய வேண்டியுள்ளது. இடம், நேரம், பதவியேற்பு செய்து வைக்கவுள்ள தலைமை நீதிபதியின் தேதி, முதல்வரின் தேதி ஆகியன அவர்களுக்கு வசதியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.  எனக்கு இந்த வாய்ப்பை அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும், செயல் தலைவர் நட்டாவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
மேலிடப் பார்வையாளர்கள் முரளிதர ராவ், சந்தோஷ் ஆகியோருக்கும், லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கும் நன்றி.     தமிழகத்தின் பிரதிநிதியாக தெலங்கானா மாநிலத்தின் சகோதரியாகச்  செல்கிறேன். ஆளுநர் பொறுப்பிலும் சிறப்பாகச் செயல்படுவேன்  என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT