தமிழ்நாடு

தமிழில் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை வெளியிட தலைமை நீதிபதி உறுதி : அமைச்சர் சண்முகம் தகவல்

4th Sep 2019 01:24 AM

ADVERTISEMENT


மென்பொருள் தயாரானவுடன் தமிழில் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை வெளியிட தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளார் என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து அமைச்சர் சண்முகம் கூறியது:
உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகள் ஆறு மொழிகளில் வெளியிடப்படும் என அறிவித்தது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழ் மொழியில் சோதனை அடிப்படையில் ஒரு தீர்ப்பை வெளியிட்டனர். இப்போது என்ன நிலைமை என்று தெரியவில்லை. தீர்ப்புகளை மொழிபெயர்ப்பு செய்வதில் சங்கடமோ, உதவியோ தேவைப்பட்டால் மொழி மாற்றத்துக்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய தமிழக அரசின் சார்பில் தயாராக உள்ளோம்.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் தமிழில் மொழிமாற்றம் செய்ய வேண்டுமென சட்டப் பேரவையில் வேண்டுகோள் விடுத்தேன்.
இது தொடர்பான கோரிக்கை மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அண்மையில் அளித்தேன்.  அதைத் தொடர்ந்து கடந்த 28-ஆம் தேதியன்று தலைமை நீதிபதி இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைந்து அந்தப் பணிகளைச் செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தீர்ப்புகளை தமிழில் அளிப்பதற்கான மென்பொருளை உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் பணிகள் முடிந்தவுடன் மொழி பெயர்ப்புப் பணியை மேற்கொள்வோம் எனத் தலைமை நீதிபதி அரசுக்குத் தெரிவித்துள்ளார்.
ஏழு பேர் விடுதலை: ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேரை விடுவிக்கும் விஷயத்தில் எங்களை குறை சொல்வதற்கு யாருக்கும் எந்த எதிர்க்கட்சிக்கும் உரிமை இல்லை. ஏழு பேரையும் விடுவிக்க சட்டப் பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றினார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
இந்த விஷயத்தில் இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பவர்களைப் பற்றி கவலையில்லை. ஏழு பேரை விடுவிக்கக் கோரி அமைச்சரவையைக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். முடிவு எடுப்பது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. தமிழக அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்தையும் மாநில அரசு செய்துள்ளது. முடிவு ஆளுநர் வசம் உள்ளது. ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவோம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர் குறை கூறுகிறார். அவர் அவரது பணியைச் செய்கிறார்.   வெளிநாட்டுப் பயணம் ஆக்கப்பூர்வமான பயணம். மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீடு தேவை என்ற அடிப்படையில் அவர்கள் (வெளிநாட்டினர்) நம்மை நாடி வருவதை விட, அவர்களை நாம் நாடிச் சென்று நமது சாதக அம்சங்களை எடுத்துக் கூறி அவர்கள் முதலீடு செய்தால் நன்றாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டே முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணத்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கும். 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முதல்வர் வெளிநாடு சென்றுள்ளதை பார்த்து எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பொறாமையில் பேசி வருகிறார். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT