தமிழ்நாடு

தனியார் நிதி நிறுவன மோசடி புகார்: உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு

4th Sep 2019 02:35 AM

ADVERTISEMENT


கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் பொது மக்களிடம் வசூலித்த ரூ. 11 கோடியை முதலீட்டாளர்களுக்குத் திரும்ப வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கோவையில் உள்ள யுனிவர்செல் டிரேடிங் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம், பொதுமக்களிடம் இருந்து முதலீடாக வசூலித்த ரூ.11 கோடியை திரும்பச் செலுத்தவில்லை. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கோவை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸார் அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்தனர். அந்த நிறுவனத்தை மூடி சீல் வைத்தனர். இந்த நிலையில் தங்களது நிறுவனத்துக்கு எதிராக போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும், நிறுவனத்துக்கு எதிராக போலீஸார் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாகவும், தேவைப்பட்டால் உடனடியாக ரூ.2 கோடியை முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும் தனியார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தனியார் நிறுவனம் வசூலித்த ரூ.11 கோடியை முதலீட்டாளர்களுக்கு ஆறு மாத காலத்துக்குள் திரும்ப வழங்க ஏதுவாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார். மேலும் இந்தக் குழுவில், பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.ரமேஷ் ஆகியோரையும் நியமித்து உத்தரவிட்டுள்ள நீதிபதி, இருவரும் ஓய்வுபெற்ற நீதிபதிக்கு உதவ வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT