தமிழ்நாடு

ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு: கேள்வித் தாளில் புதிய மாற்றங்கள்

4th Sep 2019 12:53 AM

ADVERTISEMENT


ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.) முதல்நிலைத் தேர்வில் கேள்விகளில் மட்டுமின்றி, விடையளிக்கும் முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.) அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) திங்கள்கிழமை வெளியிட்டது. இதற்கான முழுமையான விவரங்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி, ஜே.இ.இ. தேர்வில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதில் மொத்த கேள்விகள் 75-ஆகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய மூன்று பாடங்களிலும் தலா 20 கேள்விகள் கொள்குறி தேர்வு முறையிலும், தலா 5 கேள்விகள் எண்கள் வடிவில் பதிலளிக்கும் வகையிலும் கேட்கப்பட உள்ளன. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. 
தேர்வு எப்போது?: ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு இரண்டு முறை நடத்தப்படும். முதல் தேர்வானது ஜனவரி மாதமும், இரண்டாவது முறையாக ஏப்ரலிலும் நடத்தப்படும்.
முதல் தேர்வானது ஜனவரி 6 முதல் 11-ஆம் தேதி வரையிலும், இரண்டாவது தேர்வு ஏப்ரல் 3 முதல் 9-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. 
விருப்பமுள்ள மாணவர்கள், இரண்டு முறையும் தேர்வில் பங்கேற்கலாம். அதாவது ஜனவரி மாத முதல்நிலைத் தேர்வில் திருப்திகரமான மதிப்பெண் பெறாத மாணவர்கள், உடனடியாக ஏப்ரலில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் பங்கேற்கலாம். இந்த இரண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எதுவோ அதை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த இரண்டு தேர்வுகளுக்குப் பிறகே ஜே.இ.இ. பிரதானத் தேர்வு நடத்தப்படும்.
இப்போது ஜனவரி மாத முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கான முடிவுகள் 2020 ஜனவரி 31-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
மேலும் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT