தமிழ்நாடு

சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு: தலைவர்கள் கண்டனம்

4th Sep 2019 01:39 AM

ADVERTISEMENT


சுங்கச் சாவடிகள் கட்டணத்தை ரகசியமாக உயர்த்துவது பகல் கொள்ளைக்கு சமம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோன்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சுட்டுரை: சொந்த வாகனத்தில் பயணிக்கும் நடுத்தர வர்க்கத்தினரையும், சரக்குப் போக்குவரத்தை நம்பியிருக்கும் வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் வகையில் சுங்கச் சாவடிகளில் திடீரென கட்டணத்தை உயர்த்துவது கண்டனத்துக்குரியது. சுங்கச் சாவடிகளைப் பயன்படுத்தும் காலம் அதிகரிக்கும்போது கட்டணத்தைக் குறைப்பதும் ரத்து செய்வதுமே நியாயமாகும். மாறாக, அடிப்படை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தாமல் கட்டணத்தை ரகசியமாக உயர்த்துவது அரசின் பகல் கொள்ளையாகும். உடனடியாக இந்த கட்டண உயர்வைக் கைவிட வேண்டும். 
ஜி.கே.வாசன்: தமிழகம் முழுவதும் உள்ள 46 சுங்கச்சாவடிகளில் 21 சுங்கச்சாவடிகளின் வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு தற்போது சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கார், பேருந்து, கனரக வாகனம் போன்றவற்றுக்குச் சுங்கக் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் பெரிதும் பாதிக்கும். விலைவாசி உயரும். எனவே, சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.  
டிடிவி. தினகரன்: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் எந்தவித வெளிப்படையான அறிவிப்பும் இல்லாமல் திடீரென கட்டணங்களை உயர்த்தியிருப்பது கண்டனத்துக்கு உரியது. நடுத்தர மக்களைப் பாதிக்கும் கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பராமரிப்பில்லாத சாலைகள் உள்ள பகுதிகளில் கூட அதிகளவில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்கள் மக்களுக்கு பெரும் சுமையாகி விட்டன. ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத சுங்கச் சாவடிகளை மூடுவதற்கும், மற்ற இடங்களில் வசூலிக்கும் தொகையைக் கொண்டு முறையாக சாலை பராமரிப்பு மற்றும் வாகன ஓட்டிகளுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்கும் மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT