தமிழ்நாடு

சாலையோரத்தில் குழாய் பதிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

4th Sep 2019 02:00 AM

ADVERTISEMENT


விவசாய நிலங்களின் வழியாக குழாயில் எண்ணெய் பொருள்களைக் கொண்டு செல்வதைத் தவிர்த்து, சாலையோரம் கொண்டுசெல்ல வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
பொதுத் துறை பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய் பொருள்களைக் குழாய் மூலம் சேலம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களின் வழியாக  கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து விவசாயி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், விவசாயிகளிடம் கையெழுத்து பெறும் இயக்கக் கூட்டம் சங்ககிரி அருகே உள்ள மாவெளிபாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சியை சேலம் தெற்கு மாவட்ட கொமதேக செயலர் கே.சரவணன் தலைமையில், கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தொடக்கி வைத்துப்  பேசியது:
பெட்ரோலிய நிறுவனத்தின் சார்பில் அதன் பொருள்களை கோவை இருகூரிலிருந்து பெங்களூரு அருகே உள்ள தேவணகொந்தி வரை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லும்போது விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற விவசாய நிலத்தில் குழாய் மூலம் பொருள்களைக் கொண்டு செல்வதைத் தவிர்த்து, சாலையோரம் உள்ள அரசின் நிலங்களில் கொண்டு செல்ல வேண்டும்.
தமிழகத்தில் எல்லா தொழில்களும் நஷ்டமடைந்து வருகின்றன. வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. அமெரிக்காவில் தற்போதுள்ள தமிழக முதல்வர்,  அங்குள்ள விவசாயிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் எந்தெந்த வகையில் உதவி செய்துள்ளது, அவர்களின் வாழ்வாதாரம் எப்படி உள்ளது என ஆராய்ந்து, அதனை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
முதல்வர் தமிழகம் திரும்பிய பிறகு, விவசாயிகளின் நிலைமையை மாவட்டந்தோறும் கூட்டம் கூட்டி முழுமையாகக் கேட்டறிந்து, அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும்.
விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி, செப். 9-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது என்றார். 


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT