தமிழ்நாடு

சத்துணவு அமைப்பாளர் நியமன விவகாரம்: இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவு

4th Sep 2019 02:34 AM

ADVERTISEMENT


சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டு பின்னர் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்த பி.ஆண்டாள் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்னிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்றில் பணி நியமனமும் வழங்கப்பட்டது. ஆனால் அந்தப் பணியிடம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது எனக்கூறி என்னை பணியில் நியமிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நடந்துள்ள அதிகாரிகளின் குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்தவும், எனது மனுவை பரிசீலித்து தீர்வு காணவும் மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவை பரிசீலிக்காமல் எனக்கு வழங்கப்பட்ட பணிநியமன உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. எனவே எனக்கு பணி வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி அண்மையில் பிறப்பித்துள்ள உத்தரவில், மனுதாரர் கடந்த 2007-ஆம் ஆண்டு தனது 34-ஆவது வயதில் இந்த பணிக்கு விண்ணப்பித்து பணி நியமன ஆணையை பெற்றுள்ளார். ஆனால் அதிகாரிகள் அவரை பணியமர்த்தவில்லை. இதுதொடர்பாக ஏற்கெனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இதன் காரணமாக மனுதாரர் தற்போது அரசுப் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு தற்போது பிரிக்கப்பட்ட மாவட்டமாக உள்ள அரியலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ரூ.10 லட்சத்தை 8 வாரங்களுக்குள் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT