தமிழ்நாடு

கல்விக் கடன் வசூலிக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைப்பு: கே.எஸ். அழகிரி கண்டனம்

4th Sep 2019 01:42 AM

ADVERTISEMENT


கல்விக் கடன் வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 2014-ஆம் ஆண்டில் மத்திய பாஜக ஆட்சி அமைந்தவுடன், காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அந்த வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக்கடன் பெறுவதற்காக மாணவர்கள் கடும் அலைச்சலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. 
கல்விக்கடன் வழங்குவதை அதிகப்படுத்துவதற்கு மாறாக கல்விக்கடன் பெற்றவர்கள் கடுமையான துன்பத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. 
தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்கள் கல்விக்கடனாக ரூ.17 ஆயிரம் கோடி பெற்றிருக்கின்றனர். இதில் ரூ.1,875 கோடியை பாரத ஸ்டேட் வங்கி வாராக் கடன் என்று குறிப்பிட்டு ரூ.847 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்று விட்டது. இதில், ரூ.381 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் வசூலித்து பாரத ஸ்டேட் வங்கிக்குத் திரும்ப வழங்க வேண்டும்.  மீதி தொகையை வசூல் கட்டணமாக ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்துக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி வசூலாகும் பணத்தில் பாரத ஸ்டேட் வங்கி 55 சதவீதம், ரிலையன்ஸ் நிறுவனம் 45 சதவீதம் என பிரித்துக் கொள்ளப்படும்.  இத்தகைய கொடூரமான ஒரு ஒப்பந்தத்தை பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் செய்து கொள்வதற்கு மத்திய பாஜக அரசின் நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேசிய வங்கிகளில் கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் கடுமையான மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
மாணவர்களிடமிருந்து கடனை வசூலிப்பதற்காக பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவிடுகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தோடு பாரத ஸ்டேட் வங்கி செய்து கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் கே.எஸ்.அழகிரி.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT