தமிழ்நாடு

ஆவின் பாலகங்களில் சூடான  பால் ஒரு கப் விலை ரூ.3 வரை அதிகரிப்பு

4th Sep 2019 01:36 AM

ADVERTISEMENT


ஆவின் பாலகங்களில் விற்கப்படும் பால் கப்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 120 மில்லி லிட்டர் கொண்ட சூடுபடுத்தப்பட்ட பால் விலை ரூ.7-லிருந்து ரூ.10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இதேபோன்று, ஆவின் தயாரிக்கும் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் விலையும் ஓரிரு நாளில் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஆவின் பாலகங்கள் இயங்கி வருகின்றன. இந்தப் பாலகங்களை ஆவின் நிறுவனத்தின் உரிமம் பெற்று தனியார்கள் நடத்தி வருகிறார்கள். 
இந்தப் பாலகங்களில் ஆவினின் அனைத்து வகையான தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் 120 மில்லி லிட்டர் அளவுள்ள சூடுபடுத்தப்பட்ட பால் மிகவும் வரவேற்பைப் பெற்றதாகும். ஒரு லிட்டர் பாலில் 8 முதல் 9 கப்கள் கொண்ட சூடான பாலை விற்க வேண்டும் என்பது விதியாகும்.
விலை உயர்வு: ஒரு கப் சாதாரண ஆவின் பால் ரூ.7-க்கும், பாதாம் பவுடர் கலந்த பால் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆவின் பால் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து ஒரு கப் பாலின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண கப் பால் மட்டும் ரூ.3 விலை அதிகரித்து ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, பாதாம் பவுடர் கலந்த பால் ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆவின் பாலக உரிமையாளர்கள் கூறியதாவது:-
சூடான பால் விநியோகத்தில் கடுமையான நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம். பிளாஸ்டிக் தடைக்கு முன்பாக, ஆவின் நிறுவனத்தில் இருந்தே கப்கள் எண்ணிக்கை அடிப்படையில் அளிக்கப்பட்டு வந்தன. பிளாஸ்டிக் தடை காரணமாக, கப்கள் அளிக்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாங்களே கப் களை விலைக்கு வாங்கி மக்களுக்கு சூடான பாலை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, அரசு மருத்துவமனைகள், குழந்தைகள் நல மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
இதர பொருள்கள்: ஆவின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய், பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகள் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. பால் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து, இந்தப் பொருள்களின் விலையும் உயர்த்தப்படும் என்ற கூறப்படுகிறது. ஓரிரு நாள்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
அமைச்சர் நாடு திரும்பியதும்...: பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரும் 8-ஆம் தேதிக்குள் சென்னை திரும்புவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் நாடு திரும்பியதும் ஆவின் பொருள்கள் விலை ஏற்றம் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT