தமிழ்நாடு

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிரான அவதூறு வழக்குகள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

4th Sep 2019 02:38 AM

ADVERTISEMENT


அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக தமிழக முதல்வர், அமைச்சர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர்கள் அவதூறு வழக்குகள் தொடர அதிகாரம் உள்ளதா என்பது குறித்து மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில், தமிழக முதல்வர், அமைச்சர்களை விமர்சனம் செய்ததாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோருக்கு எதிராக தமிழக அரசின் குற்றவியல் வழக்குரைஞர்களால் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில், அமைச்சர்கள் என்ற முறையில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் அவர்களை விமர்சித்துள்ளதாக அரசுத் தரப்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுபோன்ற வழக்குகளைத் தொடர அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்ய அரசு வழக்குரைஞர்களுக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT