சென்னை: தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சனிக்கிழமை கூறியது:
தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாள்களுக்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
பலத்த மழை: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
வடகிழக்குப் பருவமழை வலுவடையும்: வடகிழக்குப் பருவமழை அடுத்த 4 நாள்களுக்கு தொடரும். வரும் நாள்களில் படிப்படியாக அதிகரிக்கும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக பகுதியில் நகர்ந்து செல்லும் என்பதால், மழை தீவிரமாக வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
மத்திய கிழக்கு அரபிக்கடலை ஒட்டிய கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால், அடுத்த 3 நாள்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.