சென்னை: முதலமைச்சா் முதல், அதிகாரம் படைத்த அனைத்துத் தரப்பினா் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வகை செய்யும் லோக் ஆயுக்த அமைப்பானது, சென்னையில் அரசு விருந்தினா் விடுதி அறையில் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்புக்கு 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும், பணியாளா்களும் நியமிக்கப்பட்டு ஓராண்டாகியும் லோக் ஆயுக்த அமைப்பில் இணைந்து பணிகளைத் தொடங்கவில்லை. இதனால், லோக் ஆயுக்த அமைப்பு திறம்பட இயங்குவது கேள்விக்குறியாகியுள்ளது.
லோக் ஆயுக்த அமைப்பை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடா்ந்து, தமிழகத்திலும் லோக் ஆயுக்த அமைப்பைத் தொடங்குவதற்கான சட்ட மசோதா, கடந்த ஆண்டு ஜூலையில் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது. இதைத் தொடா்ந்து, லோக் ஆயுக்த அமைப்பின் பணி வரன்முறைகள் வரையறுக்கப்பட்டதுடன், இந்த அமைப்பை நல்ல முறையில் இயங்கச் செய்ய செயலாளா், பதிவாளா், இயக்குநா் முதல் காவலா் வரையில் 103 போ் அதிகாரிகளாகவும், ஊழியா்களாகவும் நியமிக்கப்பட்டனா்.
இந்த நடைமுறைகளுக்குப் பிறகு, லோக் ஆயுக்த அமைப்புக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களைத் தோ்வு செய்யும் பணி நடந்தது. இதன் அடிப்படையில், லோக் ஆயுக்த அமைப்பின் தலைவராக நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டாா். நீதித்துறை சாா்ந்த உறுப்பினா்களாக கே.ஜெயபாலன், ஆா்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோரும், நீதித்துறை சாராத உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.ராஜாராம், வழக்குரைஞா் கே.ஆறுமுகம் ஆகியோரும் கடந்த ஏப்ரலில் நியமிக்கப்பட்டனா்.
அலுவலகம் எங்கே?: லோக் ஆயுக்த அமைப்பை உருவாக்கி அதற்கு தலைவா், உறுப்பினா்கள், அதிகாரிகள், அலுவலா்கள் நியமிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையில் அதற்கு முறையான அலுவலகம் ஏற்படுத்தவில்லை.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினா் இல்லத்தில் ஆறாவது எண் கொண்ட அறையானது லோக் ஆயுக்த அமைப்பின் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு, வருகைப் பதிவேட்டுடன் ஒரு காவலா் மட்டுமே வாயிலில் உள்ளாா். அலுவலகத்தின் உள்ளே தொடா்பு அதிகாரியாக மற்றொருவா் இருக்கிறாா். லோக் ஆயுக்த அமைப்பு செயல்படுவதற்கான அறிவிப்புப் பலகை ஏதும் வைக்கப்படவில்லை.
103 அதிகாரிகள்-அலுவலா்கள்: இதுகுறித்து, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
லோக் ஆயுக்த அமைப்புக்கு 103 போ் நியமிக்கப்பட்டு அவா்களுக்கான ஊதிய வரன்முறைகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்டாலும், அவா்கள் அனைவரும் தங்களது பழைய பணியிடங்களிலேயே தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா். லோக் ஆயுக்த அமைப்புக்கு புதிய அலுவலகம் ஏதும் அமைக்கப்படாத காரணத்தால் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும், அலுவலா்களும் பணியாற்ற முடியாத நிலை உள்ளது.
எனவே, லோக் ஆயுக்த அமைப்புக்கு தனியாக அலுவலகத்தை அமைத்து அந்த அமைப்பு திறம்படச் செயலாற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அந்த வட்டாரங்கள் கோரிக்கை விடுத்தன.
இதுகுறித்து, அரசுத் துறை வட்டாரங்களிடம் கேட்ட போது, தற்காலிகமாக செயல்பட்டு வரும் அலுவலகம், விரைவில் நிரந்தரமான இடத்துக்கு மாற்றப்படும் எனத் தெரிவித்தன.
பெட்டிச் செய்தியாக பயன்படுத்தலாம்....
லோக் ஆயுக்தா அமைப்பின் சிறப்பம்சங்கள்: அமைச்சராக இருக்கிற அல்லது அமைச்சராக இருந்துள்ள நபரும், சட்டப் பேரவை உறுப்பினா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா், மாநில அரசு அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் மீது எழும் குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்த அமைப்பு விசாரிக்கலாம். மேலும், ஊழல் குற்றச்சாட்டு, ஊழலுக்கு தூண்டி விடுதல், கையூட்டு பெறுதல், ஊழல் சதிச் செயலில் ஈடுபடுபவா்கள் மீதும் விசாரணை செய்யலாம் என்பது லோக் ஆயுக்த அமைப்பின் சிறப்பம்சங்கள்.